பிரியாணி + சிக்கன் லெக் பீஸ் + மீன் வறுவலுடன் விருந்து | தூய்மைப் பணியாளர்களுக்கு பரிமாறி அவர்களுடன் சாப்பிட்ட முதலமைச்சர் #MKStalin
சென்னை மழை பாதிப்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவருந்தினார்.
தென்மேற்கு பருவமழை முடிந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேலும் வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினாலும் கடந்த 7ஆம் தேதி இரவுமுதல் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் முழுவதும் கனமழை பெய்தது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகரின் பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார்.
நேற்று முன்தினம் யானைக்கவுனி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கிண்டி ரேஸ் கிளப் பகுதி, வேளச்சேரி ஆறுகண் கல்வெட்டு வீராங்கால் ஓடை மற்றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து இன்று சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படியுங்கள் :சிறிய மழைக்கே திமுக அரசு அலறுகிறது! | அதிமுக பொதுச்செயலாளர் #EPS குற்றச்சாட்டு!
இதையடுத்து, ஜம்புலிங்க மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முன் 'கள' பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சென்னை வெள்ள பாதிப்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சுடச்சுட பிரியாணியுடன் மீன் வறுவல் மற்றும் சிக்கன் லெக் பீஸ்ஸை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிமாறினார். தொடர்ந்து, அவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரியாணி சாப்பிட்டார்.