ரூட் தல விவகாரத்தால் உயிரிழந்த மாணவர் | அக்.14 வரை #PresidencyCollege -க்கு விடுமுறை!
சென்னையில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்தார்.
சென்னையில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்வது அவ்வப்போது நடந்து வருகிறது. பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல தொடர்பாக மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையில் ரூட் தல தொடர்பாக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் மீது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கொடூரமாக தாக்கப்பட்ட சுந்தர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள் : அரபிக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி | #IMD எச்சரிக்கை!
கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பெரியமேடு காவல் நிலையம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், மாணவர் சுந்தர் உயிரிழந்த நிலையில், சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக சென்னை மாநில கல்லூரிக்கு இன்று முதல் அக்.14ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.