சினிமா To அரசியல் - தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்!
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷல் குறித்த தொகுப்பை விரிவாக காணலாம்.
”யார் அடிச்சா பொறி கலங்கி பூமி அதிருமோ அவன் தான்... தமிழ்.. நான் தான்..” என போக்கிரி படத்தில் நடிகர் விஜய் பேசும் வசனத்திற்கு திரையரங்குகள் அதிர்ந்தது. காதல் நாயகனாக தொடங்கி தற்போது கமர்ஷியல் நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய்க்கு இன்று 50-வது பிறந்தநாள்.
குழந்தை நட்சத்திரம் To குழந்தைகள் கொண்டாடும் நட்சத்திரம்
தற்போது குழந்தைகளும் கொண்டாடும் நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக வெற்றி, குடும்பம், வசந்த ராகம், நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் நடித்துள்ளார். அவரை தனது படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படித்தான் தளபதி விஜய்யின் திரைப் பயணம் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து எஸ்.ஏ.சி. இயக்கத்தில் விஜயகாந்த், விஜய் நடிப்பில் வெளியான "செந்தூரப்பாண்டி" திரைப்படம், எதிர்பார்த்தபடி விஜய்யை பிரபலமாக்கியது. விஜய் என்ற நடிகனை தமிழ் ரசிகர்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றது.
வெறுமனே தந்தையில் கதகதப்பில் வளர்ந்து நடிகனாவதை விட தனித் திறமைகளின் மூலம் நடிகனாக நிலைக்க வேண்டும் என்று எண்ணிய விஜய் நடிப்பு. நடனம், பாடல், நகைச்சுவை. ரொமேன்ஸ், ஆக்சன் என்று கமர்ஷியல் ஹீரோவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் படிப்படியாகக் கற்றுக்கொண்டு மெறுகேறினார்.
1994-ம் ஆண்டு தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'ரசிகன்' படத்தில் தான் விஜய்யின் பெயருக்கு முன்னால் "இளைய தளபதி" பட்டம் முதன்முதலில் சூட்டப்பட்டது. விஜய்யின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த முதல் படம் என்றால் அது பூவே உனக்காக திரைப்படம் தான்.
ஒருதலை காதல் பற்றி பேசிய இந்த படம் 1996-ல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பூவே உனக்காக கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசும் வசனம் தற்போதும் கூட பலரால் ரசிக்கப்படக்கூடிய காட்சியாக இருந்து வருகிறது. 'காதல் என்பது பூ மாதிரி, ஒருதடவ பூ உதிர்ந்தால் மறுபடியும் எடுத்து ஒட்டவைக்க முடியாது' என விஜய் பேசிய வசனத்தை இன்றும் நினைவு கூறாத விஜய் ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது .
விஜய் வாழ்வில் வந்த ”பூவே உனக்காக ” ரசிகை
"பூவே உனக்காக" திரைப்படம் தான் விஜய்யின் திருமண வாழ்க்கைக்கு அச்சாரமிட்டது.
இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டு லண்டனில் படித்து வளர்ந்த ஈழத்தமிழ் பெண்ணான சங்கீதா சொர்ணலிங்கம். இவர் "பூவே உனக்காக" படத்தைப் பார்த்து விஜய்யின் தீவிர ரசிகை ஆனாராம்.
சர்கார் திரைப்படம் To நேரடி அரசியல் பிரவேசம்
மெர்சல் படத்தில் நேரடியாக அரசியல் பேசிய விஜய் அதன்பிறகு வெளியான தெறி, சர்கார் போன்ற படங்களிலும் பல அரசியல் கருத்துகளைப் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதே போல "என் நெஞ்சில் குடியிருக்கும்.." என தனது ரசிகர்கள் மத்தியில் பேசும் விஜய் அவ்வபோது அரசியல் கலந்த குட்டிக் கதைகளை சொல்ல ஆரம்பித்தார்.
இந்த நிலையில்தான் சமீபத்தில் "தமிழக வெற்றிக் கழகம்" என்று தனது கட்சியின் பெயரை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 2024ல் கட்சி ஆரம்பித்தபோது மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கவனம் செலுத்துவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், தீவிர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதால் சினிமாவுக்கு முழு விலக்கு போட உள்ளதாகவும் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் விஜய்.
- அகமது AQ