கிறிஸ்துமஸ் பண்டிகை - இஸ்ரேல் போரால் களையிழந்த பெத்லகேம்!
இஸ்ரேல் - காசா இடையே கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி தற்போது வரும் போர் காரணமாக பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நள்ளிரவு 12 மணி தொடங்கி, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. மேலும், பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர்.
தமிழ்நாட்டில், வேளாங்கண்ணி, தூத்துக்குடி, சென்னை - சாந்தோம், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, கொடைக்கானல், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் குடில்களில் குழந்தை இயேசுவின் சொரூபம் திறக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு திருப்பலி நடைபெற்றது. புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் தொடக்கமாக கிறிஸ்துமஸ் இருப்பதால் ஏராளமான மக்கள் இதனை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
இதையும் படியுங்கள் : தூத்துக்குடியில் களைகட்டும் கிறிஸ்துமஸ் - பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி தற்போது வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பாஸ்தீனியர்கள் இந்த போரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இயேசு கிறிஸ்து பிறந்ததாக கருதப்படும், பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லகேமில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளதாக அங்குள்ள தேவாலய பாதிரியார்கள் கூறியுள்ளனர். மேலும், இன்று இயேசு பிறந்திருந்தால், அவர் காசாவில் இடிபாடுகளுக்கு அடியில் பிறந்திருப்பார் என்று, காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள குழந்தைகள் குறித்து பாதிரியார்கள் கவலை தெரிவித்துள்ளனர்.