Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!

03:53 PM Dec 25, 2024 IST | Web Editor
Advertisement

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Advertisement

உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ் பண்டிகை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஆட்டு கொட்டகையில் இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் பெரும்பாலான தேவாலயங்களில் குடில் அமைக்கப்பட்டு உள்ளது. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, நெல்லை, குமரி, தூத்துக்குடி, மயிலாடுதுறை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

சென்னை :

சென்னையில் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவு முதலே பேராயர் அந்தோனி சாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் திருவிழாவிற்காக இயேசு பிறந்த தத்ரூபக் காட்சியை மணல் மற்றும் பயோ பிளாஸ்டிக் மூலம் 17 அடி சிற்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் சென்னையில் பெசன்ட் நகர் தேவாலயம் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள 365 தேவாலங்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு :

ஈரோடு மாவட்டம் புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் ஈவ் என்று சொல்லப்படும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆலயத்தின் அருட்தந்தை ராயப்பன் தலைமையில் நடைபெற்று வரும் கிறிஸ்மஸ் சிறப்பு வழிபாட்டில் ஏசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் குழந்தை இயேசுவின் சொரூபம் பவனியாக கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட குடிலில் குழந்தை ஏசு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய ஆலயத்தில் கிருஸ்துமஸ் சிறப்பு திருப்பலி வழிபாடு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து பங்குத்தந்தை சந்தன சகாயம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனை முடிவுற்றதும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருச்சி :

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மிகவும் பழமை வாய்ந்த கிறித்துவ பேராலயம் புனித லூர்து அன்னை ஆலயம் மின்விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டிருந்தது. மணப்பாறை மறைவட்ட அதிபர் ம. தாமஸ் ஞானதுரை, தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர். இதேபோல் பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா தேவாலயம், மஞ்சம்பட்டி புனித வனத்து அந்தோனியார் தேவாலயம், தீராம்பட்டி புனித வனத்து அந்தோனியார் தேவாலயம், மலையடிப்பட்டி புனித சவேரியார் தேவாலயம், கருங்குளம் புனித இஞ்ஞாசியார் தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

சிவகங்கை :

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மாதந்தோறும் வந்து மக்கள் வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் கிறிஸ்மஸ் விழவையொட்டி பங்குத்தந்தை முனைவர் இம்மானுவேல் தாசன் தலைமையில் நள்ளிரவு 12 மணிக்கு வான வேடிக்கைகளுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏரளமான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மதுரை :

மதுரை மாவட்டத்தில் கீழவாசல், அண்ணா நகர், மாடக்குளம், ஞானஒளிபுரம், கோ.புதூர், மேலவாசல், நரிமேடு, தெற்குவாசல் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் தேவாலயங்களில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

மேலும் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பை உலகிற்கு அறிவிக்கும் வண்ணம் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் புத்தாடைகள் அணிந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மதுரை கீழவெளி வீதியில் உள்ள பழமையான தூய மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டார். இதனிடையே தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவதை ஒட்டி மதுரை மாவட்டத்தில் 2,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி :

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் மிகவும் புகழ்பெற்ற தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா தேவாலயம், மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி தேவாலயம், துய்மா வீதியில் உள்ள புனித மேரி தேவாலயம், அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம், வில்லியனூர் லூர்து அன்னை ஆலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் வெளிநாட்டவர், வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்துவர்கள் குடும்பத்துடன் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடட்டத்தை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கோவை :

கோவை இரத்தனபுரியில் உள்ள சின்னப்பர் தேவலாயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல்சமயம் நல்லுறவு இயக்கம் சார்பில் நடைபெற்ற சமத்துவ கிருஸ்துமஸ் நிகழ்ச்சியில், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், பேரூர் மடாதிபதிகள் பங்கேற்று கேக் வெட்டி இனிப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு பூக்கள் கொடுத்து கிருஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனர்.

நாகப்பட்டினம் :

நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் நிறைவேற்றினார். இதனை தொடர்ந்து இயற்கை சீற்றும், நிலச்சரிவு, இஸ்ரேல் காசா போர், உக்ரைன் ரஷ்யா போர் மத்தியில் இயேசு பிறந்துள்ளதை குறிக்கும் வகையில் குடிலாக அமைக்கப்பட்டிருந்தது.

பின்னர் குழந்தை ஏசு பிறப்பின்போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்த விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாடி மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
CelebrationChennaiChristmasErodePuducherrythiruchiviruthunagar
Advertisement
Next Article