திருச்செந்தூர் | 13 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - கோலாகலமாக கொண்டாடிய மக்கள்!
திருச்செந்தூர் அருகே உள்ள மீனவ கிராமங்களான ஆலந்தலையில் 13 ஆண்டுகளுக்கு பின் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.
இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு உலகம் முழுவதும் நேற்று (டிச. 25) கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள மீனவ கிராமங்களில் கிறிஸ்துமஸ் தினம் 13 ஆண்டுகளுக்கு பின் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஆலந்தலை பகுதியிலுள்ள வீடுகள் முழுவதிலும் வண்ண மின் விளக்குகளால் நட்சத்திரங்கள் ஜொலிக்க அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேலும் வீடுகளில் இயேசு பிறப்பை காட்சிப்படுத்தும் விதமாக தத்ரூபமாக குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து காலையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் ஆலந்தலை பகுதியில் சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் வாகனங்களில் வண்ண மின் விளக்குகளை எரியவிட்டபடி கொண்டாடினர். பாடல்களை ஒலிபரப்பிய படி இளைஞர்கள் பலர் கிறிஸ்துமஸ் தாத்தா உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து நடனமாடியபடி ஊர்வலமாகச் சென்று உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 13 ஆண்டுகளூக்கு பின் நடைபெற்ற இந்த
கொண்டாட்டத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.