#Sholinganallur ராட்சத குழாய் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீண்! - தகவல் கூறியும் அதிகாரிகள் மெத்தனம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு!
சென்னை சோழிங்கநல்லூரில் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் ஓடிய நிலையில், தகவல் அளித்தும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாமல்லபுரம் அருகே கடல் நீரை குடிநீராக்கும்
திட்டத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வரும்
ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில்
ஆறு போல் ஓடியது.
குடிநீர் வீணாக சாலையில் ஓடுவது குறித்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அருகில் உள்ள 15வது மண்டல சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின்படி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால், அதிகாரிகள் செல்ல சற்று தாமதமானதால் குடிநீர் வீணாக சாலையில் ஆறாக ஓடியது.
இதையும் படியுங்கள் : சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்று #Powercut தெரியுமா?
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் குடிநீர் வெளியேறுவது குறைந்துள்ளது. வட நெம்மேலி பகுதியில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் எடுத்து செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர்
வீணாகியது. 15வது மண்டல சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை எடுக்காததே பெரும் அளவு நீர் வீணாக காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.