மனித மூளைக்குள் சிப்... சாதனை படைத்த எலான் மஸ்க்கின் நியூராலிங்க்!
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனிதனின் உடலில் முதல் முறையாக மூளை சிப்பை பொருத்தியுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டார். இவர் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா கார்கள் வெளியான சில நாள்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை இவர் அதிக விலை கொடுத்து வாங்கியதால் தனது முதல் இடத்தை இழந்தார்.
எலான் மஸ்க் 2016-ம் ஆண்டில் நியூரோ தொழில்நுட்ப நிறுவனமான நியூராலிங்க் என்ற நிறுவனத்தை நிறுவினார். மனித மூளைக்கும், கணினிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு சேனல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. மனித திறன்களை மிகைப்படுத்துவது, ALS அல்லது பார்கின்சன் போன்ற நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே ஒரு கூட்டுவாழ்வு உறவை அடைவதே லட்சியம் என்று எலான் மஸ்க் ஏற்கனவே கூறியிருந்தார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அதன் மூளை சிப்புகளை மக்களிடம் பரிசோதிக்க அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து ஒப்புதல் பெற்றதாகக் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் பதிவில்,
“நியூராலிங்க் நிறுவனம், நோயாளிக்கு முதல் முறையாக மூளை உள்வைப்பை நிறுவியது. அது சிறப்பான முறையில் முடிவடைந்தது. அவர் தற்போது குணமடைந்து வருகிறார். இதன் ஆரம்ப முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரான் ஸ்பைக் கண்டறிதலைக் காட்டுகின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.