#China : ஒரே ஒருநாள் மட்டுமே விடுப்பு - தொடர்ச்சியாக 104 நாட்கள் வேலை செய்த இளைஞர் உயிரிழப்பு!
சீனாவில் ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்து தொடர்ச்சியாக 104 நாட்கள் வேலை செய்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு நாளும், ஒருவர் காலையில் எழுந்தவுடன், இன்று மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டுமா? என்ற சலிப்புடனே நம்மில் பெரும்பாலானோர் நினைப்பதுண்டு. எப்போது சனி, ஞாயிறு வரும் என்று காத்திருக்கிறோம். வார நாட்களில் எதை சொல்லி ஒருநாள் லீவு வாங்கலாம் என புது புது காரணம் தேடுகிறோம். பண்டிகைகள், அரசு விடுமுறைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். ஏனெனில் அந்த நாட்களில் அலுவலகம் மற்றும் வேலையிலிருந்து விடுபட்டு எங்காவது நிம்மதியாக இருக்கலாம் என பலர் திட்டமிடுவதுண்டு.
ஒருபுறம், உலகம் முழுவதும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும், சில இடங்களில் இரண்டு நாட்களும், இப்போது அதை மூன்று நாட்களாக அதிகரிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. சில நாடுகளில் 3 நாடுகள் அல்லது 4 நாட்கள் விடுமுறையும் வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் உலகில் வாரத்திற்கு 3 விடுமுறைகள் பற்றி விவாதம் நடந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க சீனாவில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்து தொடர்ச்சியாக 104 நாட்கள் வேலை பார்த்த பெயிண்ட்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபாவ் எனும் சீன நாட்டைச் சார்ந்த 30 வயது நபர் பெயிண்டராக உள்ளார். அவர் இந்த ஆண்டு வரை சீசியாங் மாகாணத்தில் உள்ள ஜோசுவான் நகரத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கான திட்டத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டார்.
இதன்படி பிப்ரவரி முதல் மே வரை அவர் தினசரி தொடர்ச்சியாக அவர் வேலை செய்து வந்தார். பணியை விரைந்து முடிக்க வேண்டுமென்கிற அழுத்தத்தில் அவர் ஏப்ரல் 6ம் தேதி அன்று மட்டுமே சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டார். இதன் பின்னர் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவர் மே 25 அன்று, நோய்வாய்ப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது.
இதன் பின்னர் 3 நாட்களுக்குப் பிறகு, அவரது சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் சுவாசக் கோளாறு இருப்பதைக் கண்டறிந்தனர். மருத்துவ தீவிர சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அபாவ்வின் மரணத்தை தொடர்ந்து அவரது குடும்பம் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடியது. அதிக நேரம் பணிசெய்ய நாங்கள் தூண்டவில்லை எனவும் அவரது தன்னார்வத்தால்தான் அவர் தொடர்ச்சியாக பணி செய்தார் எனவும் அவரது தனிப்பட்ட உடல்நிலை பாதிப்பு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் சம்பந்தப்பட்ட நிறுவனம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததது. இதனைக் கண்டித்த நீதிமன்றம் ஒரு நாளைக்கு 8மணி நேரம் வீதம் வாரத்திற்கு 44மணி நேரம் மட்டுமே வேலை வாஙக வேண்டும் என்கிற தொழிலாளர் சட்டத்தை நிறுவனம் மீறியுள்ளதாக தெரிவித்தது. மேலும் இழப்பீடாக 4,00,000 யுவான் ( தோராயமாக இந்திய மதிப்பில் 47.19 லட்சம் ) வழங்க உத்தரவிட்டது.