சீனா | ஆற்றில் படகுகள் மோதி விபத்து - 11 பேர் உயிரிழப்பு!
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் யுவான்ஷுய் என்ற ஆறு பாய்கிறது. இந்த ஆற்றை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகு போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இந்த ஆற்றில் ஏராளமான படகுகள் செல்வது வழக்கம். அந்தவகையில், இந்த ஆற்றில் 19 பயணிகளுடன் படகு ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதே சமயம், எண்ணெய் கசிவை சுத்தம் செய்யும் ஒரு பெரிய படகும் வந்தது.
அப்போது பயணிகள் படகு எதிர்பாராத விதமாக எண்ணெய் கசிவை சுத்தம் செய்யும் படகுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த பயணிகள் படகு ஆற்றில் மூழ்கியது. படகில் பயணித்தவர்கள் நீரில் தத்தளித்தனர். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு 3 பேர் உயிருடனும், 11 பேர் உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டனர். நீரில் மூழ்கி மாயமான மற்றவர்களை தேடும பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படகு ஆற்றில் மூழ்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.