"இந்திய, அமெரிக்க உறவு வலுப்பெறுவதால் சீனாவும், ரஷ்யாவும் கவலை" - அமெரிக்க அமைச்சர் #RichardVerma கருத்து!
இந்திய, அமெரிக்க நட்புறவால் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் கவலை ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க நிர்வாகத் துறை இணையமைச்சர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் வர்மா 2015-17 காலகட்டத்தில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். வாஷிங்டனில் உள்ள ஹட்சன் சிந்தனையாளர்கள் பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய-அமெரிக்க உறவு குறித்து அவர் பேசியதாவது,
“இந்திய-அமெரிக்க உறவு என்பது அமைதி, ஒருங்கிணைப்பு, சர்வதேச பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வலுப்பெற்று வருகிறது. சமூகத்தின் பலதரப்பட்ட குரல்களை மதிப்பதாக உள்ளது. அதே நேரத்தில் சீனாவும், ரஷ்யாவும் இந்திய, அமெரிக்க உறவு வலுப்படுவதால் கவலையடைந்து வருகின்றன. ஏனெனில், பிரச்னைகளுக்கு அமைதி வழியில் தீர்வுகாண்பது, சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டுவது ஆகியவை இந்த இரு நாடுகளின் கொள்கையாக உள்ளது.
இந்த நூற்றாண்டின் வரையறை செய்யும் நட்பு நாடுகள் என்று அமெரிக்கா, இந்தியா நட்புறவைக் குறித்து அதிபர் ஜோ பைடனும் கூறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செனட் அவை உறுப்பினராக இருந்த ஜோ பைடன் இந்திய, அமெரிக்க உறவு குறித்துப் பேசுகையில், ‘அமெரிக்கா, இந்தியா இடையிலான நெருங்கிய நட்புறவும், ஒத்துழைப்பும் தொடரும் பட்சத்தில் உலகம் பாதுகாப்பாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
இந்தியாவிடவும், அமெரிக்காவிடமும் மிகப்பெரிய ராணுவம், மிகப்பெரிய பொருளாதாரம் இருப்பதாக அவர் இவ்வாறு கூறவில்லை. இரு நாடுகளும் சர்வதேச அளவில் அனைத்து மக்களின் நலன் கருதி இரு நாடுகளும் செயல்படுகின்றன என்பதை அடிப்படையாக வைத்துதான் அவர் இவ்வாறு கூறினார்” என ரிச்சர்ட் வர்மா தெரிவித்துள்ளார்.