“துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், ஆயுதங்களின் ஒலி அனைத்தும் அமைதியடைவதாக” - போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் உரை!
போர், துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகளில் குண்டு மழை இவற்றையெல்லாம் குறித்து ஒருகணம் சிந்திக்க வேண்டும் என போப் ஆண்டவர் ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடினர். நேரலையாக ஒளிபரப்பட்ட இந்நிகழ்ச்சியை உலகம் முழுவதும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய போப் பிரான்சிஸ்,
“போர், துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகளில் குண்டு மழை இவற்றையெல்லாம் குறித்து ஒருகணம் சிந்திக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் ஆயுதங்களின் ஒலி அமைதியடைவதாக. அங்கு அமைதி நிலவ வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன். காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படட்டும். பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்கள் விடுவிக்கப்படட்டும். போர், பசியால் தீரா களைப்படைந்துள்ள மக்களுக்கு உதவிப் பொருள்கள் சென்றடையட்டும்.
சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் (லெபனான், சிரியா உள்பட மத்திய கிழக்கு பகுதிகள்) அமைதிக்கும் பேச்சுவார்த்தைக்குமான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கட்டும். சுகாதாரப் பணியாளர்கள், சேவைத் தொண்டாற்றும் ஆண்கள், பெண்கள், தொண்டு நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக உலகெங்கிலும் சேவையாற்றும் கிறிஸ்துவ மடங்கள் ஆகியோருக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.
இன்னலில் தவிக்கும் ஏராளமான மக்களின் வாழ்க்கையில் மேற்கண்டோர் ஒளியை ஏற்றுகின்றனர். ஒவ்வொருவருக்கும் அமைதியான, ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” என தெரிவித்து தனது உரையை போப் நிறைவு செய்தார்.