Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதலமைச்சர் ராஜினாமா எதிரொலி : இன்று நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை ரத்து செய்த ஆளுநர் - மணிப்பூரில் அடுத்தகட்ட நகர்வு என்ன?

மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்ததன் எதிரொலியாக இன்று நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை அம்மாநில ஆளுநர் ரத்து செய்தார்
02:55 PM Feb 10, 2025 IST | Web Editor
Advertisement

மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங் தனது முதலமைச்சர் பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். பைரன் சிங் தனது ராஜிநாமா கடிதத்தை, இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம்  வழங்கினார்.

Advertisement

நேற்று காலை டெல்லிக்குச் சென்ற பிரேன் சிங் பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டாவையும், மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார். இந்த ராஜினாமா முடிவுக்கு 12 எம்எல்ஏக்கள்  வலுவான அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மணிப்பூரில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநில சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு  31 இடங்கள் தேவை எனும் நிலையில்  2022-ம் ஆண்டு மணிப்பூர் சட்டசபை தேர்தலில் 60 இடங்களில் போட்டியிட்ட பாஜக  32 இடங்களைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்களைக் கொண்ட குக்கி மக்கள் முன்னணி, 7 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சி, 6 எம்எல்ஏக்களைக் கொண்ட ஜேடியூ, 5 எம்எல்ஏக்களைக் கொண்ட என்பிஎப் ஆகியவை ஆதரவு தந்தன. பின்னர் ஜேடியூவின் 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

இதனிடையே மணிப்பூர் தொடர் வன்முறைகளால் 2 எம்எல்ஏக்களைக் கொண்ட குக்கி மக்கள் முன்னணி கடந்த 2023ஆம் ஆண்டு பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 7 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சியும் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றது.

இந்த இரு கட்சிகளும் ஆதரவை திரும்ப பெற்றபோதும் பாஜகவிற்கு நெருக்கடி இல்லாத நிலையில் தற்போது திடீரென தனது பதவியை முதலமைச்சர் பிரேன் சிங் ராஜிநாமா செய்துள்ளார்.

மணிப்பூரில் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மெய்தேய்  மற்றும் குக்கி இன மக்களிடையே கலவரம் ஏற்பட்டது. மெய்தேய் இன மக்களுக்குப் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே கலவரத்திற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது.

இந்த கலவரத்தை மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தூண்டியதாக குக்கி இனப்பிரிவு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்  முதலமைச்சர் பிரேன் சிங்கின் குரல் பதிவை மத்திய அரசின் தடய அறிவியல் சோதனை மையம் ஆய்வு செய்து, அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டடது.

இன்று மணிப்பூர் மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஆடியோ விவகாரம் தொடர்பாக முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில்தான் அவர் ராஜினாமா செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

முதலமைச்சர் பைரன் சிங் திடீர் ராஜினாமா முடிவால் இன்று நடைபெற இருந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை அம்மாநில ஆளுநர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதேபோல முதலமைச்சரின் ராஜினாமா முடிவைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஜக தேசியத் தலைமை புதிய முதலமைச்சரை அறிவிக்கும் எனவும் அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுவரை காபந்து முதலமைச்சராக பைரன் சிங் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags :
மணிப்பூர்ராஜினாமாBiren SinghChief Minister N Biren SinghManipurResignation
Advertisement
Next Article