முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி - தம்பதி முதலிடம்!
திருச்செந்தூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை
முன்னிட்டு ஆண்கள், பெண்கள் என இருபாலருக்குமான மாநில அளவிலான மினி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற தம்பதியினருக்கு ரூ.1 லட்சம் பரிசினை திமுக எம்பி கனிமொழி வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 71 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி திருச்சந்தூரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் சுமார் 1000 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கான போட்டி திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, அடைக்கலாபுரம்
வழியாக சுமார் 21 கிலோமீட்டர் தொலைவிலும், பெண்களுக்கு திருச்செந்தூரில்
இருந்து காயல்பட்டினம் வரையிலான சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும்
நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்
கனிமொழி போட்டியாளர்களுடன் கைகளை குலுக்கி உற்சாகப்படுத்தினார். பின்னர் அவர் கொடியசைத்து மினி மராத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.
இருபிரிவுகளிலும் வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். இதில் ஆண்கள் பிரிவில் கணவர் லெட்சுமணன், பெண்கள் பிரிவில் மனைவி சூர்யா என இருபிரிவுகளிலும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் வெற்றி பெற்று அனைவரையும் வியக்கவைத்தனர். தொடர்ந்து வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற கணவன்-மனைவி தம்பதியினருக்கு முதல் பரிசாக தலா ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை திமுக எம்பி கனிமொழி வழங்கினார். இரண்டாவது பரிசாக ரூ.75 ஆயிரம் மூன்றாவது பரிசாக ரூ.50 ஆயிரம் என இருபாலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.