காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் - நாளை அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்!
காவிரி விவகாரத்தில் நீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமி, பாஜக சார்பில் எதிர்கட்சித் தலைவர் ஆர்.அசோக் குமார், முன்னாள் முதலமைச்சர் சதானந்தா கவுடா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தினமும் 1 டி.எம்.சி டி.எம்.சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு அளித்த உத்தரவு குறித்தும், இந்த உத்தரவுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியத்தில் மேல் முறையீடு செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இறுதியில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக அரசின் முடிவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
“காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2018 ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின் படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு CWMA அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும்.
தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன். இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.” இவ்வாறு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.