Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்பெயின் நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

09:30 AM Jan 31, 2024 IST | Web Editor
Advertisement

ஸ்பெயின் நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிடுகிறார்.

Advertisement

தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call)  கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து,  தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் “ஸ்பெயின் நாட்டின் தலைநகரான 'மாத்ரித்' நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல் முறை.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிகமுக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன்.  எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.  திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன்.

கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற நாடு ஸ்பெயின்.  இந்த நாட்டை இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை.  நான் பார்த்த வரையில் கலைகளின் நாடாகக் காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும்,  தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது.  அழகான நிலப்பரப்பும். துடிப்பான கலாச்சாரமும் இணையப் பெற்று,  மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக ஸ்பெயின் விளங்குகிறது.

பழம்பெரும் வரலாறும் பாரம்பரியமும் பெற்ற இந்த நாடு போன்றே,  வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழ்நாட்டின் சார்பாக இங்கு வந்து உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே எங்களது தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது.  கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள மொழி எங்கள் தமிழ் மொழி.

ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு மிகப்பெரும் ஒற்றுமை இருக்கிறது.  காளை அடக்குதல் விளையாட்டு,  ஸ்பெயினின் தேசிய விளையாட்டாகவும் பாரம்பரிய விளையாட்டாகவும் விளங்குகிறது.  எங்கள் தமிழ்நாட்டிலும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு எமது கலாச்சாரத்தின் சின்னமாக,  உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காகவே தனியாக ஒரு ஸ்டேடியம் கட்டி இருக்கிறோம். வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு நீங்கள் வரும்போது அதனைப் பார்க்கலாம்.

இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகள்,  ஜப்பான்,  சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளேன்.  தொடர்ச்சியாக அமெரிக்கா,  ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன்.  கடந்த ஜனவரி 7,8 ஆகிய நாட்களில் நாங்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அமெரிக்கா,  இங்கிலாந்து,  சிங்கப்பூர்,  ஜப்பான், கொரியா,  பிரான்ஸ்,  ஆஸ்திரேலியா,  ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்து இருந்தன.  மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள்.  30 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள்.

மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது.  தங்கள் முதலீடுகளை பன்மடங்கு 130க்கும் மேற்பட்ட "ஃபார்ச்சூன் 500" நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று.  இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கு தொழில்களைத் துவங்க வரும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது.  பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம்.  இவை குறித்து தொழில்துறை அமைச்சரும்,  அலுவலகர்களும் விரிவாக உங்களுக்கு எடுத்துரைக்க உள்ளார்கள்.  எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று  கேட்டுக்கொண்டுக் கொள்கின்றேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிடுகிறார்.  அந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படக்கூடிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். இந்த ஆய்வின்போது தொழில்துறை அமைச்சர், தொழில்துறை செயலாளர் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags :
CMO TamilNaduInvesterInvesters MeetMK StalinSpainTN Govt
Advertisement
Next Article