நவ.28 -ல் விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மற்றும் கோவையில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனைத்தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்ட மாவட்டங்களில் பல நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் அடுத்தகட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“மாவட்டந்தோறும் கள ஆய்வு என்று நாமக்கல்லில் அறிவித்து, கோவை, விருதுநகர் மாவட்டங்களில் நேரடி ஆய்வை மேற்கொண்டேன். அதன் பின்னர் நவம்பர் 14, 15 தேதிகளில் அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வை மேற்கொண்டேன். இந்த இரு மாவட்ட மக்களுக்குமான திட்டங்களை வழங்கினேன். அதோடு திமுக தொண்டர்களுடனும் கலந்தாலோசனை நடத்தியது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது.
அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, உங்கள் மாவட்டத்திற்கு வருகை தரும் நாள் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகும். இதுவரை பார்வையிட்ட மாவட்டங்களைக் காட்டிலும் எங்கள் மாவட்டத்தில் திமுக கட்சிப் பணிகளை எவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறோம் பாருங்கள் தலைவரே என்று பெருமையுடன் கூறுவீர். மேலும் உங்கள் களப்பணிகளை என் கவனத்திற்குக் கொண்டு வந்து, அவரவர் மாவட்டத்திற்கான அரசின் திட்டங்களை வலியுறுத்திப் பெறுவீர்கள் என்பதை உங்களில் ஒருவனான நான் நன்றாக அறிவேன்.
இரு மாவட்ட அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளையும், திமுக ஆக்கப் பணிகளையும் நிறைவு செய்து, அரியலூர் - பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன். நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து திமுக தொண்டர்களான உங்களைக் கண்டு மகிழ்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.