திருவண்ணாமலையில் நடந்தே சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருவண்ணாமலையில் நடந்து சென்று திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 04-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாநிலம் முழுவதும் சென்று திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படியுங்கள் : தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஜப்பான், ஃபிலிப்பைன்ஸுக்கு சுனாமி எச்சரிக்கை!
அந்த வகையில், இன்று காலை திருவண்ணாமலை தேரடி வீதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று, திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
தேரடி வீதியில் உள்ள கடை வியாபாரிகள், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி, சோ.காட்டுக்குளம் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் 'I.N.D.I.A.' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.