முக்கிய மசோதாக்களை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. இதனையடுத்து, மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.
மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் 6 மாத கால இடைவெளிக்கு பிறகு சட்டப்பேரவை நேற்று தொடங்கியது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
நேற்று சபாநாயகர் அப்பாவு திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை வாசித்ததும் அவை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் நிகழ்வுகளுடன் அவை நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்கிறார். இதுதொடர்பாக நேற்று வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.