2024-25 தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’ ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’-ன் முக்கிய அம்சங்கள்
1 . 2024-25இல், பொருளாதார வளர்ச்சிப் போக்கைப் பாதிக்கும் உலக அளவிலான சவால்களை, தமிழ்நாட்டுப் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலுடன் எதிர்கொண்டது. பெருந்தொற்றோடு சர்வதேச அரசியல் பதற்றங்களும் தீவிரமான தட்பவெப்ப மாற்றங்களும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளைப் பாதித்ததுடன் எரிசக்தி, உணவுத் துறை ஆகியவற்றில் நெருக்கடிகளை விளைவித்தன. 2023இல் உலகப் பொருளாதாரம் 3.33% உண்மை வளர்ச்சி நிலையை அடைந்தது. 2022-23 7.61%, 2023-24 9.19%, 2024-25இல் 6.48% வளர்ச்சியை எட்டியது. ஒருங்கிணைந்த கொள்கை முடிவுகளின் வலுவான அடித்தளத்தோடு, தமிழ்நாடு குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார வளர்ச்சியில் மீண்டெழுந்துள்ளது; 2021-22இலிருந்தே 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து எட்டிவருகிறது. 2024-25இலும் 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. தமிழ்நாட்டின் முற்போக்கான சமூகநலக் கொள்கைகளும், வலுவான உள்கட்டமைப்பு வசதிகளும், பெரும் எண்ணிக்கையிலான திறன்மிகு தொழிலாளர்களும் இம்மாநிலத்தை மேம்பட்ட பொருளாதார வளர்ச்சிப்பாதையில் இடம்பெறச் செய்துள்ளனர். இந்தியாவின் நிலப்பரப்பில் 4% நாட்டின் மக்கள்தொகையில் 6% மட்டுமே கொண்டிருக்கும் தமிழ்நாடு, 2023-24ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது. 2023-24ல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) நடப்பு விலையில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது; பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71% ஆகவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33% ஆகவும் உள்ளது.
3 மோட்டார் வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, தோல்பொருள்கள் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக விளங்குவதால், மாநிலப் பொருளாதாரமானது உலகளாவிய சந்தை நிலைகளையொட்டியே அமைந்துள்ளது; இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் போக்குகளைக் காட்டிலும் உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையே பெரிதும் சார்ந்திருப்பதை அது எடுத்துக்காட்டுகிறது.
4. தமிழ்நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சியானது தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தேசிய சராசரியைவிடவும் அதிகமாகவே இருந்து வருகிறது. 2022-23ல் ரூ.2.78 லட்சமாக இருந்தது; இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தைக் காட்டிலும் 1.64 மடங்கு அதிகமானதாகும். இதன் காரணமாக, தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு நான்காம் இடம் வகிக்கிறது. மாநிலத்தின் தனி நபர் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் தேசிய சராசரியைவிட மேலே உள்ளது.
5. பெருநகரமொன்றை மட்டும் மையமாகக் கொண்டு இயங்கும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்குவங்காளம் போன்றமாநிலங்களைப் போலன்றி, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது மாநிலம் முழுவதுமுள்ள நகர்ப்புர மையங்களில் பரவலாக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற நகரங்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குவதோடு நகர்ப்புர ஊரக இடைவெளிகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
6. 2023-24ல், சேவைத் துறை (மூன்றாம் நிலை) யானது மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக்கூட்டலில் (ஜிஎஸ்விஏ) 53.63% பங்களித்தது; அதற்கடுத்து இரண்டாம் நிலைத் துறை (33.37%), முதன்மைத் துறை (13%) பங்களித்துள்ளன. வளர்ந்த பொருளாதாரங்களைப் போலவே, மாநிலத்தின் இரண்டாம் நிலைத் துறையின் பங்கு 5% அளவில் அதிகரித்தால், வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.
7. அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட நகரமயமாக்கப்பட்ட பொருளாதாரமான தமிழ்நாடு, 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. தற்போதைய ஆற்றலுடன், காலநிலை மாற்றம், மக்கள்தொகை மாற்றங்கள், தொழில்நுட்பச் சீர்குலைவு, மாறிவரும் வேலைவாய்ப்புச் சூழல்கள் போன்ற சவால்களை வியூகம் சார்ந்த திட்டமிடல் வாயிலாக வெற்றிகரமாக எதிர்கொண்டு தமிழ்நாடு இந்த இலக்கை எட்டும். மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியைப் பரவலாக்குவதற்குக் கிராமப்புறத் தொழில்முனைவோரை வளர்த்தெடுப்பதில் தமிழ்நாடு கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல், வேலையில் பெண்கள் பங்கேற்பதை ஊக்குவித்தல், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் உள்பட உயர்மதிப்பு உற்பத்தி மற்றும் சேவைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றோடு தமிழ்நாடு அதன் மக்கள்தொகை சார்ந்த அனுகூலங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (ஐடிஇஎஸ்), தளவாடங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளை விரிவுபடுத்துவதற்கான வணிகச் சூழலை உருவாக்கி, குறைகடத்தி (செமிகண்டக்டர்) மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் துறைக்கான கொள்கைகளுடன் தமிழ்நாடு ஏற்கெனவே இந்த வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது.
8. புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாகவும், காலநிலை மாற்றம் காரணமாகவும் உலகளாவிய பணவீக்கம் அதிகரித்து, 2022இல் 8.6% ஆகவும், 2023இல் 6.7% ஆகவும் இருந்தது. இந்தியாவின் சில்லறை வர்த்தகப் (சிபிஐ) பணவீக்கம் 2022-23இல் 6.7% ஆகவும், 2023-24இல் 5.4% ஆகவும் இருந்ததோடு 2024-25இல் (ஜனவரி 2025 வரை) 4.9% ஆக உள்ளது. தமிழ்நாட்டிலும் அதைப் போலவே 2022-23இல் 6% என்றிருந்த சில்லறை வர்த்தகப் பணவீக்கம், 2023-24இல் 5.4% ஆகவும், 2024-25இல் (ஜனவரி2025-ல்) 4.8% ஆகவும் குறைந்துள்ளது. 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பணவீக்கமான 4.85% ஐவிடத் தமிழ்நாட்டின் சராசரிப் பணவீக்கம் 5.7% என அதிகமாக இருந்தபோதும், 2021-22 முதல் மாநிலத்தின் சில்லறை வர்த்தகப் பணவீக்கம் கணிசமாகக் குறைந்துவருகிறது. குறிப்பாக, 2023-24இல் 20 முக்கிய இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 8ஆவது குறைந்த சில்லறை வர்த்தகப் பணவீக்கத்தைக் கொண்டிருந்தது.
9. தமிழ்நாட்டில் 2019-20இல் 6% என்றிருந்த நகர்ப்புரப் பணவீக்கம் 2024-25இல் 4.5% ஆகக் குறைந்துள்ளது (ஜனவரி 2025 வரை); கிராமப்புறாப் பணவீக்கம் 5.4% ஆக அப்படியே உள்ளது. இப்படியாக, கிராமப்புறப் பணவீக்கம் மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பணவீக்கத்தையும் இயக்குகிறது. உணவு மற்றும் பல்வகைப் பொருள்கள் கிராமப்புறப் பணவீக்கத்துக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குகின்றன.
10.பணவீக்கம் பெரும்பாலும் பணவியல் தொடர்பான நிகழ்வுதான் என்றாலும், மக்களின் வாங்கும் சக்தியைப் படிப்படியாக அது குறைத்துவிடுவதால் மக்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், மின்சாரம் ஆகியவற்றை மானிய விலையில் வழங்குவதன் வாயிலாகவும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டங்கள் வாயிலாகப் பொருளாதார ஆதரவு வழங்குவதன் மூலமும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கிறது.
11. தமிழ்நாட்டின் விவசாயம் பெரும்பாலும் பருவமழையை நம்பித்தான் நடைபெறுகிறது. விவசாயம் ரூ.1.5 லட்சம் கோடி (ஜிஎஸ்விஏவில் 6%) பங்களித்து, ஐந்தாவது பெரிய துறையாகத் திகழ்கிறது. மொத்தப் பயிரிடப்பட்ட பரப்பளவில், நெல், மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, தினை வகைகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் 62% ஆகவும், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி போன்ற உணவு தானியமல்லாத பயிர்கள் 38% ஆகவும் உள்ளன. பயிர்ப் பரப்பில் நெல் தொடர்ந்து முதன்மை நிலை வகித்துவருகிறது. 2019-20இல் மொத்தப் பயிர்ப் பரப்பில் 32.1% ஆக இருந்த நெல்லின் பங்கு 2023-24இல் 34.4% ஆக அதிகரித்துள்ளது.
12. வேளாண் புள்ளிவிவரங்கள் ஒரு கண்ணோட்டம் (2024) அறிக்கையின்படி, தமிழ்நாடு எண்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தித்திறனில் முதலிடத்திலும், மக்காச்சோள உற்பத்தித்திறனில் இரண்டாம் இடத்திலும், நெல் உற்பத்தித்திறனில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. வணிக விவசாய விரிவாக்கம், தமிழ்நாட்டின் முதன்மைப் பயிர்களின் உற்பத்தித்திறன் அதிகரிப்பு ஆகியவை ரசாயன உரங்களையும் நிலத்தடிநீரையும் அதிகமாகப் பயன்படுத்துவதன் வாயிலாக எட்டப்படுகின்றன. மாநிலத்தின் உர நுகர்வு 2019-20இல் 9.55 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 2023-24இல் 10.68 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. விவசாய மின் நுகர்வு 13,811 மில்லியன் யூனிட்டிலிருந்து 17,957 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது.
13. தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தரும் முக்கியமான அமைப்பாக விவசாயக் கடன் திகழ்கிறது. பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் வாயிலாக வழங்கப்படும் கடன் 2019-20இல் ரூ.1.83 லட்சம் கோடியிலிருந்து 2023-24இல் ரூ.3.58 லட்சம் கோடியாக அதிகரித்து, வணிக வங்கிகள் வழங்கும் விவசாயக் கடனில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. தற்போதைய சந்தை விலையுடன், நெல்லுக்கு ரூ.105 (ஒரு குவிண்டாலுக்கு), கரும்புக்கு ரூ.215 (ஒரு டன்னுக்கு) கூடுதல் ஊக்கத்தொகையாகத் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. எதிர்பாராத இயற்கைப் பேரிடர்களால் பயிரிழப்பு ஏற்பட்டால், வேளாண் காப்பீட்டுத் திட்டமானது விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்துப் பாதுகாக்கிறது. வேளாண் வணிகத்தையும் உற்பத்திப் பொருள்களைப் பாதுகாப்பதையும் எளிதாக்கும் விதமாக, 284 ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள், 525 சேமிப்புக் கிட்டங்கிகள், 395 பரிவர்த்தனைக் கொட்டகைகள், 421 உலர்த்தும் இடங்கள், 863 வணிகக் கடைகள்,268 குளிர்பதனக் கிடங்குகள் என 19,856 மெட்ரிக் டன் அளவில் மொத்தக் கொள்ளளவைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.
14. பழங்கள், காய்கறிகள், தோட்டப் பயிர்கள், அலங்காரச் செடிகள், மருத்துவப் பயிர்கள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துவருவதால், தமிழ்நாட்டில் விவசாய வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாகத் தோட்டக்கலைத் துறை மாறியுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களுக்கான மொத்தப் பரப்பளவு 2023-24இல் 16.3 லட்சம் ஹெக்டேர் அளவை எட்டியது. மாநிலத்தில் ஏராளமான கால்நடைகள், கோழி வளங்கள் உள்ளன. இவை, சிறு குறு விவசாயிகளுக்கும் நிலமற்ற தொழிலாளர்களுக்கும் முக்கியமான வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. 2023-24இல் கால்நடைத் துறையின் மொத்த மாநில மதிப்புக்கூட்டல் (ஜிஎஸ்விஏ) ரூ.1.35 லட்சம் கோடியாக இருந்தது. இது, தமிழ்நாட்டின் மொத்த ஜிஎஸ்விஏவில் 5.41% பங்களித்துள்ளது. இந்தியாவின் முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், இறைச்சி உற்பத்தியில் ஆறாம் இடத்திலும் உள்ளது. மீன்பிடிப்பு மற்றும் மீன்வளர்ப்பு ஜிஎஸ்விஏவுக்கு 1%க்கும் குறைவான பங்களிப்பை அளிக்கும்வேளையில், தமிழ்நாடு 1.34 லட்சம் டன் மீன் பொருள்களை ஏற்றுமதிசெய்து, 2023-24இல் ரூ.6,854 கோடி அந்நியச் செலாவணியை ஈட்டியது.
15. நிலத்தடிநீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் போன்ற சவால்களைத் தமிழ்நாடு சமாளித்தால் விவசாயத்திலும் அது சார்ந்த துறைகளிலும் விரைவான வளர்ச்சியை அடைய முடியும். காலநிலைக்கேற்ற செயல்பாடுகள், இயந்திரமயமாக்கல், அறுவடைக்குப் பிந்தைய மதிப்புக் கூட்டல் ஆகியவை இந்தத் துறைகளில் வருமானத்தைக் கணிசமாக உயர்த்தும்.
16. தமிழ்நாடு மிகச் சிறந்த தொழில்துறை ஆற்றல் மையமாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை 11.90% பங்களிக்கிறது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கையிலும் நாட்டில் முன்னணியில் உள்ளது. உத்யம் (Udyam) இல் பதிவுசெய்யப்பட்ட 35.56 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் (MSMEs), தமிழ்நாடு 2023-24இல் தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 'இந்தியாவின் டெட்ராய்ட் என்றழைக்கப்படும் இம்மாநிலத்தில், மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை உற்பத்திசெய்யும் 1,500 தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் ஜவுளி, தோல் பொருள்கள், மின்னணு உற்பத்தி ஆகியவற்றுக்கான முதன்மை மையமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. மோட்டார் வாகன உற்பத்தி, ஆடைகள், தோல் பொருள்கள் ஆகியவற்றில் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஜவுளி, இயந்திரங்கள், மின்னணுத் தயாரிப்புகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பொறியியல்சார் உற்பத்திப் பொருள்கள், மின்னணுப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், பருத்தி நூல், கைத்தறிப் பொருள்கள், தோல் பொருள்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதிலும் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. 2023-24இல், தமிழ்நாட்டின் மொத்தத் தொழிலாளர்களில் 33.31% (15.97% உற்பத்தி, 17.2% கட்டுமானம்) தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
17. 2021-22 மற்றும் 2023-24க்கு இடையில், உற்பத்தித் துறை 8.33% ஆகவும், கட்டுமானத் துறை 9.03% ஆகவும் வளர்ச்சியடைந்தது. போக்குவரத்து உபகரணங்கள், ரப்பர் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், மோட்டார் வாகனங்கள், டிராக்டர்கள், ரசாயனங்கள் உள்படப் பல்வேறு துணைத் துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.
18. 2024ஆம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டு ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 14.55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்வளர்ச்சியைத் தக்கவைப்பதற்கு, தமிழ்நாடு தனது பணியாளர்களுக்குத் தொழில்துறை 4.0 தொழில்நுட்பங்கள் சார்ந்து மறுதிறன் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
19. 2019-20 முதல் 2023-24 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு வர்த்தக வங்கிகள் அளித்துள்ள கடன் ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு ரூ.5,909 கோடியிலிருந்து ரூ.20,157 கோடியாக அதிகரித்துள்ளது.
20. தமிழ்நாட்டின் சேவைத் துறையானது வர்த்தகம், பழுதுபார்ப்பு, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், போக்குவரத்து, சேமிப்பகம், தகவல் தொடர்பு, நிதிச் சேவைகள், மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) மற்றும் பல துறைகளை உள்ளடக்கியது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், கல்வி, சுகாதாரம், நிதி, சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்குத் தொழில்கள் ஆகியவற்றில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. விரைவான நகரமயமாக்கலால், போக்குவரத்து, வீட்டு வசதி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் ஆகிய உள்கட்டமைப்பு சேவைகளுக்கான தேவையானது அதிகரிக்கிறது. 2023-24ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் நகர்ப்புரப் பணியாளர்களில் 54.63% பேர் சேவைத் துறையில் பணிபுரிந்தனர். இது தேசிய சராசரியான 58.07%க்கு அருகில் உள்ளது. இவர்களில் 16.28% பேர் வர்த்தகம் மற்றும் மோட்டார் வாகனப் பழுதுபார்ப்புப் பணிகளிலும், 7.53% பேர் போக்குவரத்து மற்றும் சேமிப்பகங்களிலும், 6.28% பேர் தகவல் தொடர்புத் துறையிலும், 5% பேர் கல்வித் துறையிலும், 4.86% பேர் தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளிலும், 2.84% பேர் நிதி மற்றும் காப்பீட்டு சேவைகளிலும், 11.84% பேர் இதர சேவைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
21. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சேவைத்துறையானது வலுவாக மீண்டெழுந்துள்ளது. 2021-22 மற்றும் 2023-24க்கு இடையிலான காலகட்டத்தில் இத்துறை 7.97% வளர்ந்துள்ளமைக்கு, மனை வணிகத் (ரியல் எஸ்டேட் ) துறை (9.41%), வர்த்தகம், பழுதுபார்ப்பு, ஹோட்டல்கள், உணவகங்கள் (7.98%), போக்குவரத்து மற்றும் சேமிப்பகங்கள் (7.67%) ஆகியவற்றின் வளர்ச்சியே காரணமாகும்.
22. தமிழ்நாட்டின் கடன்-வைப்பு விகிதம் (சிடிஆர்) இந்தியாவின் மூன்று முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. 10 இது தமிழ்நாட்டின் உயர் பொருளாதாரச் செயல்பாட்டைப் பிரதிபலிக்கிறது. 2019-20ஆம் ஆண்டில் 109.2% ஆக இருந்த சிடிஆர் 2023-24இல் 117.7% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் சிடிஆர் இதே காலகட்டத்தில் 76.5%இலிருந்து 79.6% ஆக உயர்ந்துள்ளது. பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் சேவைத்துறைக்கு வழங்கிய கடன் அளவு 2019இல் ரூ.2.86 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023-24ஆம் ஆண்டில் ரூ.4.46 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
23. வங்கிக் கட்டமைப்பைப் பொறுத்த அளவில் 24,390 தானியங்கிப் பணம் வழங்கும் இயந்திரங்களைக் கொண்டு நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. டிஜிட்டல் வங்கி சேவை மற்றும் யுபிஐ பரிவர்த்தனை ஆகியவற்றின் எழுச்சி மாநிலத்தின் நிதிப் பரிவர்த்தனை முறைகளைப் பெரிதும் மாற்றியுள்ளது. இது விரைவான, தடையற்ற பரிவர்த்தனைகளை உறுதிசெய்ததுடன் ஊரக மற்றும் நகர்ப்புரப் பகுதிகளில் நிதி உள்ளாக்கத்துக்கும் வழிவகுக்கிறது.
24. பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக நிலைத்தன்மைக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மிக முக்கியக் காரணியாகும். 2019-20ஆம் ஆண்டில் 15 முதல் 59 வயதுடைய தனிநபர்களுக்கான தமிழ்நாட்டின் தொழிலாளர் பங்கேற்பு விகிதமானது அகில இந்திய சராசரியான 56.9% உடன் ஒப்பிடும்போது, 63.3% ஆக இருந்தது. 2023-24இல் இது 54.6% ஆக உயர்ந்து தேசிய சராசரியான 64.3%ஐக் கடந்துள்ளது.
25. பல்வேறு சமூகக் குறியீடுகளில், முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. இது சமூக முன்னேற்றக் குறியீடு (எஸ்பிஐ) மற்றும் உயர்கல்வியில் மொத்தச் சேர்க்கை விகிதம் (ஜிஇஆர்) ஆகியவற்றில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், குறைவான குழந்தை இறப்பு விகிதம், குறைவான பிறப்பு விகிதம், குறைந்த வறுமை நிலைகள் ஆகியவற்றில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நீடித்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) குறியீட்டிலும் சுகாதாரக் குறியீட்டிலும் மூன்றாமிடத்தில் உள்ளது.
26. சமூகத் துறைக்கான செலவினங்களைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2019-20இல் ரூ.79,859 கோடியாக இருந்த ஒதுக்கீடு, 2023-24ஆம் ஆண்டில் ரூ.1.16 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமான முன்னெடுப்பாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமானது மாணவர்களின் வருகை அதிகரிப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதிசெய்துள்ளது. அதைப் போலவே மகளிர் மேம்பாட்டுக்கெனக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் விடியல் பயணத் திட்டம் உள்ளிட்ட முன்னெடுப்புகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளது.
27. 2005-06 முதல் 2022-23 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் வறுமை நிலை(ஹெச்சிஆர்) 36.54%இலிருந்து வெறும் 1.43% என வெகுவாகக் குறைந்துள்ளது. அதே வேளையில், அகில இந்திய அளவில் வறுமை நிலை 55.34%இலிருந்து 11.28% ஆகக் குறைந்துள்ளது. 2023-24இல் முக்கியமான மாநிலங்களில் வஊரகப் பகுதிகள் மற்றும் நகர்ப்புரங்களில் சராசரி தனி நபர் நுகர்வுச் செலவில் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்தது. தனிநபர் ஆண்டு வருமானத்தில் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது.
28. இந்தியாவிலேயே அதிகக் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாடு, தொடக்கக் கல்வி, உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இலவசக் கல்வி, விலையில்லாப் பாட நூல்கள், கல்வி உபகரணங்கள், மிதி வண்டிகள் விநியோகம், மதிய உணவுத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மாணவர்கள் ஈடுபாட்டுடன் தொடர்ந்து வகுப்புகளுக்குச் செல்வதை உறுதிசெய்கின்றன. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 58,722 பள்ளிகளில் 1.29 கோடி மாணவர்கள் பதிவுசெய்துள்ளனர். இது நாட்டின் மொத்த மாணவர் சேர்க்கையில் 5.24% ஆகும். தமிழ்நாட்டின் தொடக்கப் பள்ளிகளில் மொத்த மாணவர் பதிவு (ஜிஇஆர்) விகிதம் 98.4% ஆகவும், உயர்நிலைப் பள்ளிகளில் 97.5% ஆகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 82.9% ஆகவும் உள்ள நிலையில், தேசிய அளவில் இந்த விகிதம் முறையே 91.7%, 77.4% மற்றும் 56.2% ஆக உள்ளது. தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வியில் ஆசிரியர் -மாணவர் விகிதம் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையின்படி பள்ளிக் கல்வித் தரநிலைக் குறியீட்டில் கேரளாவுக்கு (82.2%) அடுத்த நிலையில் தமிழ்நாடு (73.4%) உள்ளது. மேல்நிலைக் கல்வியைத் தொடர முடியாமல் இடைநிற்றல் வீதம் தமிழ்நாட்டில் 4.5% ஆக உள்ள நிலையில், தேசிய சராசரி 12.6% ஆக உள்ளது.
29. நாட்டிலுள்ள சிறந்த 50 ஆராய்ச்சி நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களைக் கொண்டு உயர் கல்வியிலும் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுகிறது. மேலும், தேசிய அளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 8 மாநிலப் பல்கலைக்கழகங்களும் சிறந்த 100 கல்லூரிகளில் நான்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் என்ஏஏசி அங்கீகாரத்தில் உயர்ந்த தர வரிசையைப் (ஏ /ஏ /ஏ) பெற்றுள்ளன. இந்தியாவிலே அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப நிறுவனங்களைக் (506 பொறியியல் கல்லூரி, 492 பல்தொழில்நுட்பப் பயிலகங்கள் கொண்டு, உற்பத்தித் துறைக்கும் சேவைத் துறைக்கும் அதிக திறன்மிகு பணியாளர்கள் கிடைப்பதை உறுதிசெய்கிறது.
30. ஐந்தாவது தேசியக் குடும்ப நல சுகாதாரக் கணக்கெடுப்பின்படி பல்வேறு சுகாதாரக் குறியீடுகளில் மாநிலம் சிறப்பாகச் செயல்படுகிறது. வாழ்நாள் எதிர்பார்ப்பில் முக்கிய மாநிலங்களில் மூன்றாம் இடம் வகிக்கிறது. மருத்துவச் சுற்றுலாவுக்கு உகந்த இடமாகவும் வளர்ந்துள்ளது. 2023-24ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பானது, 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 372 அரசுப் பொது மருத்துவமனைகள், 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
31. கல்வித் துறையில் அனைத்து நிலைகளிலும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்ததிலும் பொது சுகாதாரக் கட்டமைப்பை 13 வலுப்படுத்தியதிலும் வெற்றிகரமாக விளங்கும் தமிழ்நாடு, புதிய சுகாதாரத் திட்டங்கள், மேம்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக வயது முதிர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண வேண்டும்.
32. தமிழ்நாடு கவனம்கொள்ள வேண்டிய ஒன்றாகக் காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. அண்மைய ஆண்டுகளில் பெரும்புயல்கள் (2016இல் வர்தா, 2017இல் ஒக்கி, 2018இல் கஜா, 2023இல் மிக்சாங் மற்றும் 2024இல் ஃபெங்கல் மற்றும் வெள்ளம் (குறிப்பாக 2015 மற்றும் 2017) உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளை மாநிலம் அதிகம் அனுபவித்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு 0.68 டிகிரி செல்சியஸ் அதிகரிப்புடன் சராசரி வெப்பநிலை மாற்றத்தில் மேல்நோக்கிய நிலை காணப்படுவதோடு, மாநிலத்தில் மழைப் பொழிவு குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கால நிலை ஆய்வு நிலையத்தின் அறிக்கை, வட கிழக்குக் கடலோரப் பகுதிகள் தீவிர வானிலை நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை எனவும், வடகிழக்குப் பருவமழையின்போது, பெருவெள்ளம், சூறாவளி, கடல் மட்டம் உயர்வு, நீண்ட நாள்களுக்கு நீர் தேங்குவதால் விவசாயத்தில் ஏற்படும் கடும் சேதம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளது. அடர்ந்த காடுகள் காரணமாகக் கரியமில வாயு குறைவாக வெளிப்படுவதால் ஒப்பீட்டளவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறைந்த பாதிப்பை எதிர்கொள்கின்றன. அதே வேளையில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பாதிப்புக்குள்ளாவதால் வறட்சி அதிகரித்து, விவசாய உற்பத்தியைப் பாதிக்கிறது.
33. தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை உருவாக்கியுள்ள தமிழ்நாடு அரசு, காலநிலை மாறுபாடுகளின் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முன்கூட்டியே தயாராகும் அணுகுமுறையைக் கையிலெடுத்துள்ளது. 2023-30 ஆண்டுக்கான தமிழ்நாடு காலநிலை மாற்றச் செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளதோடு காலநிலை மாறுபாடுகளை எதிர்கொள்ள ரூ.1,000 கோடி பசுமை நிதியமும் உருவாக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக்கின் எஸ்டிஜி 13 (காலநிலைச் செயல்பாடு) குறியீடு 2023-24 அறிக்கையில் தமிழ்நாடு 81 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. தேசிய சராசரியான 67ஐவிட இது அதிகமான அளவில் உள்ளது.
34. தமிழ்நாடு அதன் 2023-30 செயல்திட்டத்தின் வாயிலாகக் காலநிலை சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. கரியமில உமிழ்வுக் குறைப்பு, நீடித்த வேளாண்மை, சிறப்பான நீர் மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது. நகர்ப்புர வெள்ளங்கள், வெப்ப அலைகள், மற்றும் பல்லுயிர் இழப்பு ஆகியவற்றை எதிர்கொள்ளப் பசுமை உள்கட்டமைப்பும் கடலோரச் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் தேவைப்படுகின்றன.
35. தமிழ்நாட்டின் நடுத்தரக் கால வெற்றியானது அதன் உழைக்கும் வயதினரை முடுக்கிவிடுவதையும் நீடித்த வளர்ச்சி குறித்த கவனத்துடன்கூடிய உட்கட்டமைப்புவசதிகளையுமே சார்ந்துள்ளது. காலநிலை மாற்றங்களுக்குத் தீர்வு காணவும், தொழிலாளர்களின் தேவை-விநியோகச் சமநிலையின்மையினைச் சரிசெய்யவும் புதுமையான மற்றும் ஒருங்கிணைந்த கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியப் பொருளாதாரப் பரப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்க முடியும்.