திருவள்ளுவர் தினம்;10 பேருக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
2024-ஆம் ஆண்டிற்கான விருதுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அதன்படி அய்யன் திருவள்ளுவர் விருதுக்கு புலவர் மு.படிக்கராமு, தந்தை பெரியார் விருதுக்கு ராஜேந்திரன், அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விசிக எம்பி ரவிக்குமார், மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலன், பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கு பொன்.செல்வகணபதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் விருதுக்கு முத்து வாவாசி, தமிழ் தென்றல் திரு.வி.க. விருதுக்கு மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதுக்கு வே.மு.பொதியவெற்பன், பெருந்தலைவர் காமராசர் விருதுக்கு கே.வி.தங்கபாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அந்தந்த விருதுகளுக்குதேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விருதுகளை வழங்கியுள்ளார். அதோடு தந்தை பெரியார் விருதை பெற்றுக்கொண்ட விடுதலை ராஜேந்திரனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றுக்கொண்ட எம்பி ரவிக்குமார் ஆகியோருக்கு ரூபாய் 5 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
முத்தமிழறிஞர் கலைஞர் விருது பெற்ற முத்து வாவாசிக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 10 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மற்றவிருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் 2 லட்சத்தோடு ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் வழங்கப்பட்டது.