தீரன் சின்னமலையின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமானவர் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி. தனது இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் என அனைத்து விதமான அடிமுறைகளையும் கற்று தேர்ந்த வீரர் தான் தீரன் சின்னமலை.
ஆங்கிலேயர்களிடமிருந்து, தன் தாய் நிலத்தின் உரிமைகளைக் காத்திட, மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் தன்னை இணைத்துக் கொண்டு, ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தானோடு சேர்ந்து பல கட்ட போராட்டங்ள் நிகழ்த்தி வெற்றி கண்டவர். சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 269-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய ஒப்பற்ற வீரர் தீரன் சிமன்னலையின் பிறந்தநாள் இன்று! அந்நியர் ஆதிக்க எதிர்ப்புணர்வு இன்று வரை நம் தமிழ் மண்ணில் தீவிரமாக விளங்குகிறதென்றால், அன்றே ஆங்கிலேயருக்கு எதிரான தம் போரால் அதற்கு வித்திட்ட வீரர்தான் சின்னமலை! அவர் வீரமும் புகழும் வாழ்க!" என்று தெரிவித்துள்ளார்.