214 புதிய பேருந்துகளை தொடக்கி வைத்து பொதுமக்களுடன் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்காண்டு நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டு தொடங்கிய நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சென்னை தீவுக்கடலில் நடந்த நிகழ்ச்சியில், 214 புதிய பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 27 புதிய அதிநவீன சொகுசு பேருந்துகளையும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 114 புதிய பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 31 புதிய பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 14 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 18 புதிய பேருந்துகளும் என மொத்தம் 214 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்தார்.
இந்த 214 பேருந்துகளில் 70 நகரப் பேருந்துகள் மகளிர் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், பேருந்தில் ஏறி பொதுமக்களுடன் பயணித்தார். அப்போது பேருந்து சரியாக நிறுத்தத்தில் நிற்கிறதா? ஏதாவது கம்ப்ளைண்ட் இருந்தா எங்கிட்ட சொல்லுங்க என அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.