கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
உலகின் முன்னணி ஸ்டார்ட் அப் மையங்களுள் ஒன்றாக தமிழ்நாட்டை நிலை நிறுத்தவும், உலகளாவிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைக்கவும், புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாகவும் நாட்டில் முதல் முறையாக கோவையில் கொடிசியா அரங்கில் உலக புத்தொழில் மாநாடு இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் கலந்துக்கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை சென்றடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பு முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் விமான நிலையத்தில் இருந்து கொடிசியா வளாகத்திற்கு சென்றடைந்தார். அங்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் முதலீட்டாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.