மீண்டும் பிரதமராகும் லாரன்ஸ் வோங்கிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 97-ல் 87 இடங்களை கைப்பற்றி, 65.6% வாக்குகளுடன் வெற்றிப் பெற்றது. தேர்தலில் வெற்றிப் பெற்ற பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு உலக தலைவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் லாரன்ஸ் வோங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“பிரதமர் லாரன்ஸ் வோங், தலைவராக பொறுப்பேற்ற தனது முதல் தேர்தலில் மக்கள் செயல் கட்சியை அதன் தொடர்ச்சியான 14-வது வெற்றிக்குள் வழிநடத்தி, சிங்கப்பூர் மக்களிடமிருந்து மகத்தான ஆணையைப் பெற்றதற்கு வாழ்த்துகள்.
தமிழ் சமூகத்துடனான அவரது தொடர்ச்சியான ஈடுபாடும், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதற்கான அவரது முயற்சிகளும் சிங்கப்பூரின் உள்ளடக்கிய உணர்வைப் பிரதிபலிக்கின்றன.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.