“முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்” - அமைச்சர் #TRBRajaa பேட்டி!
தமிழ்நாட்டை முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் மாநிலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில்துறை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த விழாவின் இடையே, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“இதுவரை வரலாறு காணாத மகத்தான வளர்ச்சி தமிழ்நாட்டிற்கு கடந்த 3 ஆண்டுகளாக கிடைத்துள்ளது. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் பயணிப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை கொண்டு போய் சேர்க்க வேண்டும், அனைத்து மக்களுக்கும் வளர்ச்சியை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.
முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை இன்று உருவாக்கி இருக்கிறார். தேவையான உட்கட்டமைப்பு வசதியை தாண்டி முதலீட்டாளர்களுக்கும் பெரும் லாபத்தை ஈட்டும் அளவிற்கு செயல்படும் தொழிலாளர்கள் கிடைக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு.
இன்றைய விழா மூலம் 31 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 19 முதலீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. முதலமைச்சர் அமெரிக்கா செல்ல இருக்கிறார். மிகப்பெரிய அளவில் தொழில் முதலீடுகள் வந்து சேரும். இன்னும் ரூ.15 ஆயிரம் கோடியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது”
இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.