"தலைமை நீதிபதியின் அலுவலகம் மட்டுமல்ல… உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே #Chandrachud சிதைத்துவிட்டார்" - கடுமையாக விமர்சித்த மூத்த வழக்கறிஞர்!
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே சிதைத்துவிட்டார் என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே குற்றம்சாட்டியுள்ளார்.
நீதிபதிகள் தங்கள் மத மற்றும் அரசியல் சார்புகளையும் அது சார்ந்த செயல்களையும் பொதுவெளியில் பிரதிபலிப்பதன் மூலம் அவர்களின் நீதி வழங்குதல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும். இதனிடையே, அண்மையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் அரசியல் தலைவராக இருக்கும் பிரதமர் மோடி கலந்துகொள்வது நீதித்துறையில் அரசின் தாக்கம் இருப்பதை புலப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.
மேலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அங்கு ராமர் கோயில் கட்டாலாம் என்று கடந்த 2018ம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில் சந்திரசூட்டும் ஒருவர். இதைப்பற்றி சமீபத்தில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அந்த வழக்கு நடந்த சமயத்தில் சாமி சிலை முன் அமர்ந்து தனக்கு ஒரு வழி கூறும்படி பிரார்த்தித்தேன் எனவும் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் வழிகாட்டுவார் எனவும் நிகழ்ச்சி ஒன்றில் பெருமையாக கூறிக்கொண்டார்.
மத ரீதியாக மிகவும் சர்ச்சைக்குரிய, எளிதில் ஒருவரை புண்படுத்திவிடக்கூடிய இதுபோன்ற விஷயங்களை சந்திரசூட் தெரிவிப்பது அவரது தனிப்பட்ட நம்பிக்கை அவரது தீர்ப்பில் பிரதிபலித்துள்ளதாகவே பார்க்க முடிகிறது.இந்த விவகாரங்களை முன்வைத்தே சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் கண்ணியத்தையே சிதைத்துவிட்டதாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே விமர்சித்திருக்கிருக்கிறார்.
இதையும் படியுங்கள் : “தமிழக விளையாட்டு துறை இந்தியாவை மட்டுமில்லை, உலகத்தையே ஈர்த்துள்ளது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய துஷ்யந்த் தவே கூறியதாவது :
"என்னுடைய 46 வருட சட்டப் பணி அனுபவத்தில், பொதுவெளியில் அதிகமாக தெரியக்கூடிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டைப் பார்க்கிறேன். அவர் விளம்பரத்தை விரும்புபவராக இருக்கிறார். அவர் என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது முதற்கொண்டு அவரைப் பற்றிய அனைத்தையும் ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் மட்டுமல்லாது உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே அவர் சிதைத்திருக்கிறார்" இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.