#Chhattisgarh | போலி வங்கி தொடங்கி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி… சினிமாவை மிஞ்சும் சம்பவம்!
சத்தீஸ்கரில் போலி வங்கி கிளை அமைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில உள்ளது சபோரா கிராமம். அங்கு மர்ம நபர்கள் சிலர், கட்டடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து போலியான எஸ்.பி.ஐ., கிளையை உருவாக்கினர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக உண்மையான வங்கி போல், மேஜை, நாற்காலிகள், கண்ணாடி கூண்டுகள் உள்ளிட்டவற்றை வாங்கி வைத்தனர்.
தொடர்ந்து, அவர்கள் வேலைக்கு ஆள் எடுப்பதாக ஏழைகள், வேலை இல்லாதவர்களை குறிவைத்து ரூ.30 ஆயிரம் சம்பளம் என ஆசை காட்டி உள்ளனர். அவர்களிடம் லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கான ஆர்டரை போலியாக உருவாக்கி அவர்களிடம் வழங்கி உள்ளனர். அரசு வேலை என்பதால் பலர் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பணம் கொடுத்துள்ளனர்.
மேலும், அப்பகுதி மக்கள் போலி வங்கி கிளையில் வரவு, செலவு வைக்கவும் துவங்கி உள்ளனர். இந்த போலி வங்கி அமைந்துள்ள நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள தாப்ரா நகரில் செயல்படும் எஸ்.பி.ஐ., கிளையின் மேலாளருக்கு போலி வங்கி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் அங்கு சென்று விசாரித்துள்ளார்.
போலி வங்கி கிளை ஊழியர்கள் சரியான பதிலை அளிக்காததால், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி வங்கி கிளை அமைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.