சத்தீஸ்கர் - ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் காவல்துறையில் சரண்..!
சத்தீஸ்கரில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 103 மாவோயிஸ்டுகள் காவல்துறையில் சரணடைந்தனர். காந்தி ஜெயந்தியான இன்று டிஐஜி கம்லோச்சன் காஷ்யப், பிஎஸ் நேகி மற்றும் பிஜாப்பூர் எஸ்பி ஜிதேந்திர குமார் யாதவ் ஆகியோர் முன்பு இந்த சரணடைதல் நிகழ்ந்தது.
சரணடைந்தவர்களில் ரூ.1.06 கோடி ரூபாய்க்கும் அதிகமான வெகுமதிகள் அறிவிக்கப்பட்ட பல போராளிகள் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநில அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின் கீழ் சரணடைந்த ஒவ்வொருவருக்கும் உடனடி உதவியாக ரூ.50,000 காசோலை வழங்கப்பட்டது.
இது குறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரிகள், தொடர்ச்சியான பாதுகாப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மாவோயிஸ்டுகளுக்குள் வளர்ந்து வரும் ஏமாற்றம் ஆகியவை இந்த சரணடைதலுக்கு காரணம் என்று தெரிவித்தனர்.
ஜனவரி 1, 2025 முதல் இதுவரை, பிஜாப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 410 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். மேலும் 421 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 137 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளின் வலிமையான கோட்டையாகக் கருதப்பட்ட பஸ்தார் பிரிவில், மாவோயிஸ்டுகளின் வலிமை மற்றும் மன உறுதியில் சரிவு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.