#ChhatrapatiShivajiStatue உடைந்த விவகாரம் - செப். 1-ம் தேதி எதிர்கட்சிகள் பேரணி!
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த விவகார எதிரொலியாக, அம்மாநில எதிர்கட்சிகள் செப். 1-ம் தேதியில், தெற்கு மும்பையில் உள்ள ஹுதாத்மா சௌக்கில் இருந்து இந்தியாவின் நுழைவாயில் வரை பேரணி செல்லவுள்ளது.
மகாராஷ்டிரா சிந்துதுர்க் மாவட்டம் மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை கடந்த ஆண்டு டிச. 4-ம் தேதி கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சிலையை திறந்து வைத்தார். இந்த 35 அடி உயரமுள்ள சிவாஜி சிலை ஆக. 26 இடிந்து விழுந்தது. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த விவகாரத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இந்த சம்பவம் குறித்து அந்த மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசும்போது, சிலை இடிந்து விழுந்ததற்கான சரியான காரணத்தை கண்டுபிடிப்பதாக உறுதியளித்தார். மேலும் அதே இடத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை மீண்டும் நிறுவ அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். சிலை உடைந்து விழுந்த சம்பவத்தில் சிலையை கட்டிய ஒப்பந்ததாரர் ஜெய்தீப் ஆப்தே மற்றும் கட்டமைப்பு ஆலோசகர் சேத்தன் பாட்டீல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இடிந்த சத்ரபதி மகாராஜ் சிலை குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசினர். உத்தவ் தாக்கரே பேசியதாவது, “பலத்த காற்று வீசியதால்தான், சிலை இடிந்து விழுந்தது என்று அரசு கூறியிருப்பது வெட்கக்கேட்டின் உச்சம். மாநில அரசை எதிர்த்து, மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சிகளின் தலைமையில் செப். 1-ம் தேதியில், தெற்கு மும்பையில் உள்ள ஹுதாத்மா சௌக்கில் இருந்து இந்தியாவின் நுழைவாயில் வரை அணிவகுத்துச் செல்லவுள்ளது. சிவாஜி மகாராஜின் சிலை இடிந்து விழுந்ததற்கு எதிராக கலகம் ஏற்படுத்துபவர்கள் போர்வீர மன்னருக்கு துரோகம் இழைப்பவர்களே” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சரத் பவார் “சிலையை நிறுவுவதற்கு கடற்படையின் அனுமதி அவசியம் என்பதால் கடற்படையை குற்றம் சாட்டுவதன் மூலம் அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது. இந்த சிலையை உருவாக்கத்திலும் ஊழல் நடந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் ஊழல் உச்சத்தை எட்டியுள்ளது என்பது தெரியவருகிறது’’ என்று தெரிவித்தார்.