சென்னை ஓபன் டென்னிஸ்: கோப்பை வென்றார் இந்திய விரர் சுமித் நாகல்!
ஏடிபி புதிய தரவரிசை பட்டியலின் அடிப்படையில் சுமித் நாகல் முதல் முறையாக டாப்-100 இடத்திற்குள் நுழைகிறார்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன்
இணைந்து சர்வதேச டென்னிஸ் சென்னை ஓபன் ATP சேலஞ்சர்ஸ் 100 புள்ளிகளுக்கான
டென்னிஸ் தொடர், சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் கடந்த
5-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடினர். இந்தியாவை பொறுத்தவரை சமீபத்தில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்
தொடரின் இரண்டாம் சுற்று வரை முன்னேறிய, இந்திய வீரர் சுமித் நாகல் உட்பட 14
வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
இதையும் படியுங்கள் ; “என் பேரன்கள் இந்த சிறுவனை போல் இருக்க வேண்டும்” – ஆனந்த் மகிந்திரா நெகிழ்ச்சி!
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 121-வது இடத்தில் உள்ள சுமித் நாகல் (இந்தியா), 114-ம் நிலை வீரரான லுகா நார்டியை (இத்தாலி) எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் இருந்தே சுமித் நாகல் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் நார்டியை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கினார். ஆட்டம் 1 மணி 40 நிமிடங்கள் நடந்தது. சுமித் நாகலுக்கு ரூ.15 லட்சம் பரிசுடன் 100 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. இது அவா் வெல்லும் 5-ஆவது ஏடிபி சேலஞ்சா் பட்டமாகும்.
இந்த வெற்றியின் மூலம் ஏடிபி புதிய தரவரிசை பட்டியலில் சுமித் நாகல் முதல் முறையாக டாப்-100 இடத்திற்குள் நுழைகிறார். அவர் 98-வது இடத்தை பிடிக்கிறார். 2019-ம் ஆண்டு பிரஜ்னேஷ் குணேசுவரனுக்கு பிறகு டாப்-100க்குள் வரும் முதல் இந்திய வீரர் நாகல் ஆவார்.