சென்னையில் மனநலம் பாதித்த இளைஞர் பேருந்து இயக்கியதால் பரபரப்பு!
சென்னையில் மாநகர பேருந்தை இயக்கிய மனநலம் பாதித்த இளைஞரால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வண்டலூரில் இருந்து பிராட்வே பேருந்து நிலையத்துக்கு இன்று (நவ.29) மாநகர பேருந்து 21G வந்தது. பேருந்து ஓட்டுனர் இளங்கோவனும், நடத்துனர் கோவிந்தராஜனும் நேரக் காப்பாளரிடம் பதிவு புத்தகத்தில் எழுதுவதற்காக சென்றனர். அப்போது ஓட்டுநர் இளங்கோவன் பேருந்திலேயே சாவியை விட்டு சென்றார்.
அங்கு சுற்றிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென பேருந்துக்குள் சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கினார். அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறினர். பிளாட்பாரத்தின் இரும்பு கம்பத்தில் இடித்து பேருந்து நின்றது.
அதனை தொடர்ந்து, பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் பதறியடித்து ஓடி வந்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவரை பிடித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரை கீழ்பாக்கம் மன நல காப்பகத்தில் சேர்த்தனர். மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக துறைரீதியிலான விசாரணையை நடத்தி வருகின்றனர்.