இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதல்
ஐபிஎல் 2024 தொடரின் 46வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலானசிஎஸ்கே அணியானது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் அடுத்தடுத்து இருதோல்விகளை சந்தித்த நிலையில் இன்றையஆட்டத்தை சந்திக்கிறது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
தனது கோட்டையான சேப்பாக்கத்தில் கடந்த ஆட்டத்தில் 210 ரன்களை குவித்த போதிலும் சிஎஸ்கே அணியால் வெற்றி பெற முடியாமல் போனது. இந்த ஆட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்கள் தடுமாறினர். இதுவும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதேவேளையில் நடப்பு சீசனில் இரு ஆட்டங்களில் 277 மற்றும் 288 ரன்கள் வேட்டையாடிய பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது தனது கடைசி ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகளை குவித்து பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரை மட்டுமே பெரிதும் சார்ந்துள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 7 ஆட்டங்களில் 133 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் அவர், கடைசி ஆட்டத்தில் தனது இடத்தை இழந்தார். அவருக்கு மாற்றாக கடந்த இருஆட்டங்களிலும் தொடக்க வீரராக களமிறங்கிய அஜிங்க்ய ரஹானேவிடம் இருந்தும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. டேரில் மிட்செல்லிடம் இருந்தும் எதிர்பார்த்த அளவிலான பங்களிப்பு இல்லை. 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 24.33 சராசரியுடன் 146 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் சிஎஸ்கே வீரர்கள் ஒட்டுமொத்தமாக உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறினர். கடந்த இரு ஆட்டங்களிலும் 7 ஓவர்களை வீசிய துஷார் தேஷ்பாண்டே 76 ரன்களை தாரைவார்த்தார். மற்றொரு தொடக்க பந்து வீச்சாளரான தீபக் சாஹரும் இந்த சீசனில் எதிர்பார்த்த அளவிலான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. நடு ஓவர்களில் முஸ்டாபிஸூர் ரஹ்மானும், இறுதிக்கட்ட ஓவர்களில் பதிரனாவும் ஆறுதல் அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
நடப்பு சீசனில் முதலில் பேட்டிங் செய்யும்ஆட்டங்களில் அதிரடி பேட்டிங் அணுகுமுறையை கையாண்டு வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவர்பிளே ஓவர்களை சிறந்த முறையில் பயன்படுத்தி ரன்வேட்டை நிகழ்த்தி வருகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி முதலில் பேட் செய்யும் பட்சத்தில் சிஎஸ்கே பந்து வீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கக்கூடும். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சோபிக்கத் தவறிய டிராவிஸ் ஹெட், எய்டன் மார்க்ரம், நித்திஷ் ரெட்டி, ஹெய்ன்ரிச் கிளாசன், அப்துல் சமத் ஆகியோர் மீண்டும் மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும்.