சென்னை புறநகர் ரயில் சேவைகள் வழக்கம்போல் இயக்கம்..!
சென்னையில் மிக்ஜாம் புயலால் தடைபட்டிருந்த புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் வழக்கம்போல் இயங்க தொடங்கின.
மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. மழை வெள்ள நீர் ரயில் தண்டவாளங்களை ஆக்கிரமித்ததால், சென்னையில் புறநகர் ரயில்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
தொடர்ந்து, வியாழக்கிழமை முதல் சென்னை சென்ட்ரல் அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் - மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம்..!
அதன்படி சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி மார்க்கத்தில் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. அதே போல், சூலூர்பேட்டை, திருவொற்றியூர் - சூலுர்பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அரை மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இன்று முதல் சென்னை சென்ட்ரல் - திருத்தனி வழித்தடத்திலும் ரயில்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கியுள்ளன.