சென்னை - மொரிஷியஸ் இடையே விமான சேவை - 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடக்கம்!
சென்னை - மொரிஷியஸ் இடையே 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விமான சேவைகள் தொடங்கியுள்ளன.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியதை அடுத்து படிப்படியாக விமான சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டன. வெளிநாடுகளுக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானங்கள் சென்றன. ஆனால் ஹாங்காங், மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்கு விமான சேவைகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.
இதனிடையே சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஹாங்காங், மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்கு மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் சென்னை - ஹாங்காங் இடையிலான விமான சேவைகள் தொடங்கின.
இதையும் படியுங்கள் : “இனிப்பு வழங்கிய சகோதரர் ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை கொடுப்போம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
இந்நிலையில், சென்னை - மொரிஷியஸ் இடையிலான விமான சேவைகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளன. சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் 173 பயணிகளுடன் இன்று மீண்டும் மொரிஷியஸ் நாட்டிற்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டுச் சென்றது.
மொரிஷியஸ் நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் இந்திய மாணவர்கள், 4 ஆண்டுகளாக விமான சேவைகள் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர். இந்நிலையில் மீண்டும் நேரடியாக சென்னை - மொரிஷியஸ் இடையே விமான சேவைகள் தொடங்கியுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.