Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Chennai | "தாழ்தள மின்சாரப் பேருந்துகள் அடுத்தாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும்!" - அமைச்சர் #Sivasankar தகவல்!

09:08 PM Oct 22, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக நவீன வசதிகளுடன் கூடிய 12 மீ நீளமுள்ள 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகள், ஏப்ரல்-2025 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"மாநகர் போக்குவரத்துக் கழகமானது, 659 வழித்தடங்களில் 3,233 பேருந்துகளை, 32 பணிமனைகள் மூலம் இயக்கி வருகிறது. இதன் மூலம் தினமும் சராசரியாக 34 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்து வருகிறது. மேலும் பொது மக்களின் போக்குவரத்துத் தேவையினை பூர்த்தி செய்யும் விதமாகவும், நகரின் கார்பன் தடயத்தை கணிசமாகக் குறைக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்குகளை அடைவது, புகையில்லா மற்றும் மாசு இல்லாத பொது போக்குவரத்து சேவையை அளிக்கும் விதமாகவும், நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை மொத்த விலை ஒப்பந்த மாதிரி முறையில் இயக்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் ஓஎச்எம் குளோபல் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட், ஈவி டிரான்ஸ் பிரைவேட். லிமிடெட் மற்றும் ஏரோகிள் ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்கள் கலந்து கொண்டனர். தற்போது, மேற்படி ஒப்பந்தமானது முடிவுக்கு வந்து ஓஎச்எம் குளோபல் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மின்சாரப் பேருந்தானது ஸ்விட்ச் மொபிலிட்டி ஆட்டோமோட்டிவ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் தயார் செய்து இயக்கப்பட உள்ளது.

இந்த பேருந்துகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள தாழ்தள மின்சாரப் பேருந்துகள் ஒரு முறை மின்னேற்றம் செய்தால் சராசரியாக 180 கி.மீ. இயக்க இயலும். நாளொன்றுக்கு சராசரியாக 200 கி.மீ. வரை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர்சாதன வசதியில்லாத 400 மின்சாரப் பேருந்துகளும், குளிர்சாதன வசதியுடன் கூடிய 100 மின்சாரப் பேருந்துகள் என மொத்தம் 500 மின்சாரப் பேருந்துகள் பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை-1, பூவிருந்தவல்லி, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர்-2 ஆகிய 5 பணிமனைகளிலிருந்து இயக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைத்திடும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

இந்த மொத்த விலை ஒப்பந்த மாதிரி முறையில், மின்சாரப் பேருந்துகள் வாங்குவது மற்றும் அவற்றை 12 ஆண்டுகள் பராமரித்து இயக்குவது, உதிரி பாகங்கள் கொள்முதல் செய்வது மற்றும் ஓட்டுநர்களை பணியமர்த்துவது உள்ளிட்ட அனைத்தும் இயக்குபவரின் பொறுப்பாகும். இதுமட்டுமின்றி மின்சாரப் பேருந்துகளுக்கு தேவையான மின்னேற்ற கட்டமைப்பை தயார் செய்து பராமரிப்பதும் மற்றும் பணிமனையை பராமரிப்பதும் இயக்குபவரின் பொறுப்பாகும்.

மேலும், இப்பேருந்துகளுக்கான நடத்துநர்கள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக நியமிக்கப்பட்டு, மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து கட்டணத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம். பேருந்துகளின் வழித்தடம், நடத்துநர்கள் மற்றும் பயணிகளுக்கான சேவையின் நிலை, பேருந்து இயக்குவதன் மூலம் ஈட்டப்படும் வருவாய் ஆகியவை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் பொறுப்பாகும்.

ஒப்பந்ததாரருக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு குளிர்சாதன வசதியில்லாத மின்சாரப் பேருந்துகளுக்கு ரூ.77.16 எனவும், குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகளுக்கு ரூ.80.86 எனவும் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இயக்கப்படும் டீசல் பேருந்துகள் இயக்குவதற்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் ரூ.116/- செலவிடப்படுகிறது. இந்த புதிய திட்டத்தினால் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கான மூலதன செலவுகள் (சுமார் ரூ.875 கோடிகள்), உதிரி பாகங்கள், பராமரிப்பு செலவுகள், ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் ஊதிய செலவுகள் தவிர்க்கப்படுகிறது.

மேலும், இம்மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தால் பொதுமக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சேவையை வழங்கிட வழிவகை செய்யும். இம்மின்சாரப் பேருந்துகளை பயன்படுத்துவதன் மூலம், சென்னை மாநகரின் கார்பன் தடயத்தை கணிசமாகக் குறைத்து, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்குகளை அடைவது, புகையில்லா மற்றும் மாசு இல்லாத பொது போக்குவரத்து சேவையை அளிக்க இயலும். மொத்த விலை ஒப்பந்த மாதிரியானது (GCC) பேருந்து செயல்திறன், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை சிறந்த முறையில் கையாளுவதையும் உறுதி செய்கிறது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்."

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
BUSChennaicm stalinnews7 tamilSivasankartamil nadu
Advertisement
Next Article