பேட்டிங்கில் சொதப்பிய சென்னை அணி... கொல்கத்தாவிற்கு 104 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இன்றைய 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இன்று தோனி தலைமையில் சென்னை அணி ஆட்டத்தில் பங்கெடுத்துள்ளது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்திலிருந்தே ரன்கள் எடுக்க தடுமாறியது.
ஒரு பக்கம் வரிசையாக விக்கெட்டையும் இழந்தது. தோனி, ஜடேஜா போன்ற முக்கிய வீரர்களும் 1, 0 என ரன்களே எடுக்காமல் ஆட்டமிழந்தனர். முடிவில் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே குவித்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வைபவ் அரோரா, மொயின் அலி தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
நடப்பு சீசனில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மிடில் ஆர்டரில் சரியான பேட்டர்கள் இல்லாததும், பவர் பிளேயில் ரன்கள் குவிக்காதது, விக்கெட்டுக்கான எதிரணியின் கேட்ச்களை தவறவிடுவது என பல இடங்களில் சென்னை அணி சொதப்பியது. இதனால் தொடர்ச்சியாக கடந்த 4 ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது.
இன்றும் கொல்கத்தா அணிக்கு 104 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஒருவேளை கொல்கத்தா அணி இந்த 104 ரன்கள் இலக்கை வெற்றிப் பெற்றால் சென்னை அணி தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையை படைக்கும். ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோற்றதில்லை.