Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்றுடன் நிறைவுபெறும் சென்னை புத்தகக் காட்சி - இதுவரை 9 லட்சம் வாசகர்கள் வருகை!

01:50 PM Jan 21, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 47வது புத்தக காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. 17 நாட்களில் 9 லட்சம் வாசகர்கள் வருகைதந்த இப்புத்தக காட்சியில், சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

Advertisement

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47வது புத்தகக் காட்சி கடந்த ஜனவரி 3-ம் தேதி தொடங்கி இன்றுடன் (ஜன. 21) நிறைவுபெறுகிறது. ஜனவரி 8-ம் தேதி சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக அன்று ஒரு நாள் தவிர மொத்தம் 18 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெற்றது. 

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றன. குறிப்பாக, அனைத்து அரங்கிலும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 600 பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம் பெற்றன. பார்வையற்றவர்களுக்கு சிறப்பாக அரங்கு அமைக்கப்பட்டு, இலவச கழிப்பறை, குடிநீர் மற்றும் இண்டர்நெட் வசதிகள் வழங்கப்பட்டன.

150க்கும் மேற்பட்ட பபாசி உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முறை திருநங்கைகளுக்கான இரு சிறப்பு அரங்குகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டன. பூவுலகின் நண்பர்கள், காக்கைக்கூடு, இயல்வாகை போன்ற சூழலியல் சார்ந்த அரங்குகளும் பெருமளவில் அமைக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் பூம்புகார் (தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்) சார்பில் 2000 சதுர அடியில் அரங்கு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழ்நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் மேடை பேச்சுகள் இடம்பெற்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த புத்தக காட்சிக்கு நேற்று (ஜன. 20) வரை 9 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளதாகவும், சுமார் ரூ.10 கோடி வரை புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு நூற்றாண்டு கண்ட 3 பதிப்பகங்களுக்கும், அரைநூற்றாண்டு கண்ட பதிப்பாளர்கள் 10 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

Tags :
BAPASIBook Expo 2024Book FairBook FestivalChennaiNews7Tamilnews7TamilUpdatesPublishers AssociationSouth Indian Booksellers
Advertisement
Next Article