ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 10 நாட்களுக்குப் பின் கைதான திமுக கவுன்சிலர்! நடந்தது என்ன?
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலரை 10 நாட்களுக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புக்கத்துறை
அடுத்துள்ள குமாரவாடி பகுதியில் கடந்த 21 ஆம் தேதி, அடையாளம் தெரியாத உடல் ஒன்று
கண்டறியப்பட்டது. தொடர் விசாரணையை அடுத்து, கொலை செய்யப்பட்டவர் பெயர் குமார் என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநர் என்றும் தெரிய வந்தது. மேலும் இவர் வண்டலூர் கொளப்பாக்கம் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
தாமோதரன் (49), மற்றும் அவரது கூட்டாளிகளான சேலையூர் பகுதியைச் சேர்ந்த
செந்தில்குமார் (47), கார்த்தி (36), ராம்குமார் (32) மற்றும் பிரவீன் (33)
ஆகியோரை படாளம் போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
தாம்பரம் மாநகராட்சி 45-வது வார்டு கவுன்சிலர் தாமோதரன் மற்றும் உயிரிழந்த ஆட்டோ
ஓட்டுனர் குமார் ஆகிய இருவரும் நண்பர்கள். இதில், தாமோதரன் அவர்
வீட்டில் வாடகைக்கு இருந்த வேல்விழி என்ற பெண்ணுடன் நாளடைவில் பழக்கம்
ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அப்பெண்ணை மணந்ததாக கூறப்படுகிறது. மேலும் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்து மற்றும் நகைகளை வேல்விழியிடம் தாமோதரன் கொடுத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாமோதரனின் நண்பர் குமாரிடமும் வேல்விழி நெருங்கி பழகி வந்ததால்
நண்பர்கள் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் குமார் அவ்வப்பொழுது, வேல்விழியிடம் இருந்து பணம் மற்றும் நகை உள்ளிட்டவைகளை வாங்கி, பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அடுத்து இருவரும் திருப்போரூர் அடுத்துள்ள
நெல்லிக்குப்பம் என்ற பகுதியில், தனியாக வீடு எடுத்து தங்கியதாகவும்
கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தாமோதரன் குமாரிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த பிரச்சனையால் கடும் மன உளைச்சலில் இருந்த வேல்விழி கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதனால், தனது மனைவி வேல்விழி, ஓட்டுநர் குமாரிடம் கொடுத்த பணத்தை, தாமோதரன் திரும்ப கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பகை வளர்ந்து வந்த நிலையில், கடந்த 21 ஆம் தேதி, ஆட்டோ ஓட்டுநர் குமார் மற்றும் கார்த்தி, செந்தில், ராம் குமார், பிரவீன் உள்ளிட்ட நபர்களுடன் தாமோதரனும் படாளம் அடுத்த குமாரவாடி பகுதிக்கு
சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது, பணம், நகை குறித்து தாமோதரனுக்கும் குமாருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தாமோதரன், சுத்தியல் மற்றும் கூர்மையான கருங்கல் கொண்டு,
ஆட்டோ ஓட்டுநர் குமாரை தலை மற்றும் உடல் பாகங்களில் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் பலத்த படுகாயம் அடைந்த குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பனின் மனைவியுடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டது கொலையில் முடிந்திருப்பது படாளம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.