செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3937 கன அடியாக குறைப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 3937 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை, விமான சேவை அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.
தற்போது சென்னையில் இருந்து 210கிமீ வடதிசை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்வதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு 20 கி மீ வடக்கு -வட கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது இன்று காலை ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மச்சிலிபட்டணத்திற்கும் இடையே, பாபட்லாவிற்கு அருகே, கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் தற்போது ஏரிக்கு நீர்வரத்து 8514 கன அடியாக உள்ளது. அதன் மொத்த உயரம் 24 அடியில் தற்போது 22.90 அடி நீர் இருப்பு உள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 8,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது, உபரி நீர் திறப்பு 3937 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.