கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற இளவரசன், பஞ்ச பாண்டவர்களால் களபலி கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புராண வரலாற்றை கூவாகம் திருவிழா நினைவுக் கூறுகிறது. உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள் : சித்ரா பௌர்ணமி அன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் - சென்னை நாட்டிய குழுவினர் பரதநாட்டியம் ஆடி அசத்தல்!.
இங்கு ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி நேற்று மாலையும், அதனைத்தொடர்ந்து கூத்தாண்டவர் தேரோட்டமும், திருநங்கைகள் தாலி அறுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, இன்று (ஏப். 24) அரவான் கண் திறத்தல் மற்றும் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழாவிற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்தியதோடு மருத்துவத் துறையினர் கிராமத்தில் உள்ள இரண்டு இடங்களில் 24 மணி நேரம் செயல்படக்கூடிய மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை சார்பில் கிராமம் முழுவதும் 130 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து பக்தர்களை கண்காணிக்கப்பட்டனர். 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.