தஞ்சை பெரியகோயிலில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
தஞ்சை பெரிய கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சித்திரைத் திருவிழா தமிழ்நாட்டின் அனைத்து கோயில்களிலும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தஞ்சை பெரிய கோயிலில் இன்று திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் தேரோட்டமானது 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகுவிமரிசையாக நடைபெறும். பின்னர் இத்தேர் சிதலமடைந்ததால், தேரோட்டம் நடைபெறவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு அரசு புதிய தேர் செய்து கொடுத்ததையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை பெரியக் கோயிலில் கடந்த ஏப். 6 ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
முதலில் விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே புறப்பட்டுச் செல்ல, தியாகராஜர் கமலாம்பாள் எழுந்தருளிய திருத்தேரும் சென்றது. அதைத் தொடர்ந்து, நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரர் சப்பரங்கள் சென்றன.
இதில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாநகராட்சி ஆணையர் இரா. மகேஸ்வரி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, சமய அறநிலை துறை இணை ஆணையர் சு. ஞானசேகரன், உதவி ஆணையர் கோ. கவிதா, சூரியனார் கோவில் ஆதின ஸ்ரீ கார்யம் சுவாமிநாத சுவாமி தேசிகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேரோடும் 4 வீதிகளிலும் சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களிலும் தன்னார்வலர்கள் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைத்து வழங்கி வருகின்றனர். தேரோட்டத்திற்காக ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.