“சார்பட்டா பரம்பரை திரைப்படம் வேண்டுமென்றே #NationalFilmAwards-ல் புறக்கணிக்கப்பட்டது!” - பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!
‘சார்பட்டா பரம்பரை’ தேசிய விருதுகளில் நிராகரிக்கப்பட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளில் வெளியாகி கொண்டாடப்பட வேண்டிய படங்களில் ஒன்று ‘சார்பட்டா பரம்பரை’. ஆனால், இந்த படம் கொரோனா காலகட்டத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான இந்த படத்தை பார்த்து மக்கள் கொண்டாடினார்கள். இந்த படம் அரசியல் காரணங்களுக்காக தேசிய விருதுக்காக அனுப்பப்பட்ட போது நிராகரிக்கப்பட்டது என பா.ரஞ்சித் கூறியிருக்கிறார்.
சென்னையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர் ” சார்பட்டா பரம்பரை படத்தினை கொண்டாடும் அதே சமயத்தில் அந்த படத்தின் இரண்டாவது பாதி நல்லாவே இல்லை என எழுதிய எத்தனையோ பேர் இருக்கிறார்கள். மோசமாக படத்தின் இரண்டாவது பாதியை விமர்சனம் செய்தார்கள்” என சற்று கோபத்துடன் பா.ரஞ்சித் பேசினார்.
தேசிய விருதுக்கு செல்ல ‘சார்பட்டா பரம்பரை’ படம் நிராகரிக்கப்பட்டது அரசியல் காரணங்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக பேசிய பா.ரஞ்சித் “கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் வாங்கினால் படங்கள் தேசிய விருது வாங்கும் என்று சொல்வார்கள் ஆனால், என்னுடைய படம் அந்த விருதுகள் வாங்கியும் தேசிய விருது நிராகரிக்கப்பட்டது” என வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய பா.ரஞ்சித் ” உண்மையில், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் தேசிய விருதுக்கு தகுதியற்றவையா? நான் திரைக்கு வெளியே பேசும் கருத்துக்களை வைத்து என்னுடைய படத்தை தீர்மானிக்கிறார்கள். இந்த வெறுப்பை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது” எனவும் பா.ரஞ்சித் தெரிவித்தார்.