திருப்பதி - மன்னார்குடி விரைவு ரயில் சேவையில் மாற்றம்!
பொறியியல் பணி காரணமாக, திருப்பதியிலிருந்து விழுப்புரம் வழியாக மன்னார்குடி வரை இயக்கப்படும் பாமணி விரைவு ரயில் மாற்றுத் தடத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பணிகாரணமாக பாமணி விரைவு ரயில் மாற்றுத் தடத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
‘காட்பாடி- திருவண்ணாமலை- விழுப்புரம் ரயில் பாதையில் பொறியியல் மற்றும் தண்டவாள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக, ஆகஸ்ட் 8 மற்றும் 15-ஆம் தேதிகளில் திருப்பதியிலிருந்து முற்பகல் 11.55 மணிக்குப் புறப்படும் திருப்பதி- மன்னார்குடி பாமணி விரைவு ரயில் (வ.எண்.17407) பாகாலா சந்திப்பு, சித்தூர், காட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட், போளூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக திருப்பதியிலிருந்து ரேணிகுண்டா, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக மாற்றுத் தடத்தில் இயக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.