9 வயதில் கோடீஸ்வரரான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷ்!
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில், அவரது பேரனும் 9 வயதில் கோடீஸ்வரனாகி இருப்பது தெரியவந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணியும் வெற்றி வாகைச்சூடியது.
குறிப்பாக சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் நிகர மதிப்பு 12 நாட்களில் ரூ.1,225 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கு தேசம் கட்சியும் வெற்றி பெற்ற செய்தி வந்தவுடன், நாயுடு குடும்பத்தினர் நடத்தும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் ( Heritage Foods) பங்குகள் ராக்கெட்டாக மாறி வேகமாக உயரத் தொடங்கின. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கின் அபரிமிதமான ஏற்றத்தால் பங்குகளின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டது.
ஜூன் 10 அன்று, ஹெரிடேஜ் ஃபுட் பங்குகள் 100 சதவீதம் உயர்ந்து ரூ.727.35 ஆக இருந்தன. இந்தப் பங்கின் விலை 12 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளது. 23 மே 2024 அன்று ரூ 354.50 இல் முடிவடைந்த பங்கு, 10 ஜூன் 2024 அன்று ரூ 727 ஐத் தாண்டியது. இந்நிறுவனத்தின் பங்குகள் 5 நாட்களில் 70 சதவீதம் உயர்ந்து 12 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளன.
ஹெரிடேஜ் குழுமம் 1992 இல் சந்திரபாபு நாயுடுவால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் பால், சில்லறை வியாபாரம் மற்றும் விவசாய பிரிவுகளில் செயல்படுகிறது. இந்நிறுவனம் 1996 ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் நுழைந்தது. சந்தபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஹெரிடேஜ் ஃபுட்ஸின் ப்ரொமோட்டர்களில் ஒருவராக உள்ளார். இந்நிறுவனம் பால், தயிர், நெய், பனீர் போன்ற பால் பொருட்களை விற்பனை செய்கிறது. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனம் நாட்டின் 11 மாநிலங்களில் வர்த்தகம் செய்து வருகிறது.
6 நாட்களில் கோடீஸ்வரரான பேரன்
ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தில் நாயுடு குடும்பம் 35.7 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி நாராவுக்கு அதிகபட்சமாக 24.37 சதவீத பங்குகள் உள்ளன. மகன் நாரா லோகேஷ் 10.82 சதவீத பங்குகளை வைத்துள்ளார். 0.06 சதவீத பங்குகள் அவரது 9 வயது பேரன் தேவான்ஷிடம் உள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கு பின், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வேகமாக உயர்ந்ததையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஷ் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு ரூ.4.1 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், அவரது மனைவி மற்றும் மகனின் நிகர மதிப்பும் 6 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளது. மே 23 அன்று இவர்கள் இருவரின் பங்குகளின் மதிப்பு ரூ.1100 கோடியாக இருந்தது. கடந்த 10 நாட்களில் இது ரூ.2300 கோடியாக உயர்ந்துள்ளது. பங்குகளின் உயர்வு காரணமாக ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு வாரத்தில் ரூ.2400 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.3700 கோடியில் இருந்து ரூ.6136 கோடியாக அதிகரித்துள்ளது.