“சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு: குதிரை பேரம் அதிர்ச்சி அளிக்கிறது!” - உச்சநீதிமன்றம்
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வென்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் குதிரை பேரங்கள் நடந்தது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு இடைக்கால தடையும் கோரியது ஆம் ஆத்மி. அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்க உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் வழக்கு தொடர்ந்தார். கடந்த 5-ம் தேதி ஜனநாயகத்தை இப்படி படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கண்டித்தது.
இதனை அடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்தல் நடத்தும் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேரடியாக சில கேள்விகளை முன்வைத்தார்.
தலைமை நீதிபதியின் கேள்வி : நீங்கள் வாக்கு சீட்டில் கையெழுத்து இடலாம், ஆனால் டிக் மார்க் எதற்கு செய்தீர்கள்
தேர்தல் அதிகாரி : அடையாளம் தெரிவதற்காக டிக் மார்க் செய்தேன்.
தலைமை நீதிபதி: அப்படி ஆனால் நீங்கள் மார்க் செய்தீர்கள் என்பதை ஒப்பு கொள்கிறீர்கள். இவர் தண்டிக்கப்பட வேண்டியவர், இவருக்கு எதிராக வழக்கு பதிய வேண்டும். தேர்தல் ஜனநாயகத்தில் இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் வேறு தேர்தல் அதிகாரியை துணை ஆணையர் நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி எந்த கட்சியையும் சாராதவராக இருக்க வேண்டும். உயர்நீதிமன்ற பதிவாளர் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட வேண்டும். மேலும் அனைத்து வாக்கு சீட்டுகளையும் உயர்நீதிமன்ற பதிவாளர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதனை பார்த்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். வழக்கு நாளை விசாரணைக்கு மீண்டும் எடுக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.
அப்போது சொலிசிட்டர் ஜெனரல், உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளது என்று இப்போதே முடிவு செய்யக்கூடாது, எனவே நீதிபதிகள் அந்த கருத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, ஆம், குதிரை பேரங்கள் நடப்பது எங்களை பாதித்துள்ளது. குதிரை பேரங்கள் நடப்பது மிகவும் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது, எனவே சண்டிகர் மேயர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து வீடியோ பதிவுகளையும் உச்சநீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய வேண்டும். அதனை ஆராய வேண்டியுள்ளது என உத்தரவிட்டார்.