சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா - பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!
நெல்லை மாவட்டம் பணகுடி பாஸ்கரபுரம் சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா மங்கள இசை, நையாண்டி மேளத்துடன் தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவில் குடியழைப்பு, பக்தர்களின் நேர்த்திக்கடனாக பால்குடம் எடுத்தல், கும்பாபிஷேகம், அன்னதானம், முளைப்பாறி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் விழா சிறப்புடன் நடைபெற்றது.
விழாவின் முக்கிய அம்சமாக விரதம் இருந்த பக்தர்கள் அனுமன் நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கோயில் முன்பாக அமைக்கப்பட்ட பூக்குழி பீடத்தை வலம் வந்து வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து சாமியாடிகள் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அனைத்து தரப்பு பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொடை விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் பூக்குழி பீடத்தை வணங்கி வழிபாடு செய்தனர்.