தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், வரும் 27ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும், தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில், காற்றின் வேக மாறுபாட்டால், மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தமிழ்நாட்டில் ஓரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. மற்றபடி, பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்படுகிறது. இதையடுத்து, வெப்பநிலை உயரும் என்றும் வானிலை மையம் கணித்து கூறுகிறது.
அதன்படி, மேற்கு கடற்கரை பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் பகுதிகளிலிருந்து வறண்ட காற்றின் வருகையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெப்பநிலை ஒரு டிகிரி உயரக்கூடும் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.