தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. சென்னையில் மட்டும் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது. வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர்.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் கோடைமழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்ததையடுத்து கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தொடர்ந்து, தென்மேற்கு பருவ மழை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது.
பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.