#WeatherUpdate | தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் ஒரு வார காலத்துக்கு மிதமான மழை பெய்யும் என்றும், அக்.14-ஆம் தேதி சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய அரபிக்கடலில் நிலவிய புயல் சின்னம், அக்.10-இல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் நீடிக்கிறது. இது அடுத்த 2 அல்லது 3 நாள்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதேசமயம், தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், அக்.12-ஆம் தேதிக்கு மேல் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிதாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.
இந்த வானிலை நிகழ்வுகளின் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வார காலத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை மற்றும் புகா் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக, அக்.14-இல் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகிழக்குப் பருவமழை: இந்திய பகுதிகளிலிருந்து தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகிய பிறகு, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் வானிலை அமைப்புகளைப் பொறுத்தே வடகிழக்கு பருவமழை தொடங்கும் தினத்தை கணிக்க முடியும் என்றாா் அவா்.
தமிழக வானிலை நிலவரம்: அக்.11-இல் திண்டுக்கல், கரூா், நாமக்கல், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தேனி, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், அக்.12-இல் திருப்பூா், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆரஞ்ச் எச்சரிக்கை: அக்.13-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களிலும் அக்.14-இல் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் மக்கினம்பட்டியில் 120 மில்லி மீட்டரும், மாதவரம் (சென்னை) 90 மி.மீ, நிலக்கோட்டை (சென்னை), பொள்ளாச்சி (கோவை) , உத்திரமேரூா் (காஞ்சிபுரம்), அடையாறு (சென்னை), ஆனந்தபுரம் (விழுப்புரம்), கனடியான் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 70 மி.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.